பக்கம் எண் :

117

     ‘ஆதாரங்கள் மாணவனுக்கு ஒன்று குழப்பம் தரும்’ என்பது சரி. ஆனால்,
‘ஆதாரங்கள் மாணவனுக்குத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும்’ என்று இருக்க
முடியாது. ‘மாணவனுக்கு... தவறான முடிவுகளைத் தரும்’ என்றோ ‘மாணவனைத் தவறான
முடிவுக்கு இட்டுச்செல்லும்’ என்றோ இருப்பது பொருத்தமானது.
 
2.2.5 செயப்பாட்டுவினை
 
     செயப்பாட்டுவினை வாக்கியத்தின் சில பகுதிகள் செய்வினை அமைப்பிலேயே
இருக்குமானால் வாக்கிய ஒழுங்கு குலைகிறது.
 
  (45) விளம்பரங்களில் உண்மையை மட்டுமே சொல்லப்பட வேண்டும் என்பதை சிங்கப்பூர் அரசு கட்டாயமாக்கும்.
 
     ‘சொல்லப்பட’ என்று செயப்பாட்டுவினையாகப் பயன்படுத்த வேண்டுமானால்
‘உண்மையை’ என்று இருக்க முடியாது. ‘...உண்மை - சொல்லப்பட வேண்டும்’ என்பதே
செயப்பாட்டுவினை வாக்கியத்தின் ஒழுங்கு.
 
  (46) இதைத் தனியார் துறை உளவியல் மருத்துவமனைகளுடன்
இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளப்படுதல் வேண்டும்.

     ‘புரிந்துகொள்ளப்படுதல்’ என்ற செயப்பாட்டுவினையிலேயே வாக்கியம் இருக்க
வேண்டுமானால் ‘இதை’ என்பது ‘இது’ என மாற்றப்பட வேண்டும். அல்லது ‘இதை’ என்பது
இருக்க வேண்டுமானால் ‘புரிந்துகொள்ளுதல்’ என மாற்ற வேண்டும்.

     பின்வரும் இரு எடுத்துக்காட்டுகளிலும் செயப்பாட்டுவினை மாற்றம் முழுமையாக
நிகழவில்லை.
 
  (47) வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
 
     ‘வெள்ளம்’ பாதித்த ...’என்றோ ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...’ என்றோ இருக்க
வேண்டும்.
 
  (48) புலிகளிடம் 140 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

     ‘புலிகளிடம்’ என்றால் ‘சிறைப்பட்டனர்’ என்று வினைமுற்று மாற்றப்பட வேண்டும்.
‘சிறைபிடிக்கப்பட்டனர்’ என்று செயப்பாட்டு வினைமுற்றை வைத்துக்கொண்டால் ‘புலிகளால்’
என்று மாற்ற வேண்டும்.