ஒரு மொழியில் எழுதப்படும் சொல், வேறு மொழியில் வேறு விதமாக எழுதப்படுவதுண்டு. இதற்குக் காரணம் ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் (orthography) வேறுபடுவதுதான். ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவது எழுத்துப் பெயர்ப்பு (transliteration) எனப்படும். Chekhov என்ற புகழ்பெற்ற ரஷ்ய படைப்பாளியின் பெயர் பிரெஞ்சு மொழியில் Tchekhov என்றும் இத்தாலிய மொழியில் Cechov என்றும் ஜெர்மன் மொழியில் Tschechow என்றும் சுவீடிஷ் மொழியில் Tjechov என்றும் ஸ்பானிய மொழியில் Tchejoff, Tchekov, Chejov என்றும் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டது. தமிழில் முதலில் சேகவ் என்று எழுதப்பட்டது. இது நேரடியாக ரஷ்ய மொழி ஒலிப்பு முறையைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்ட எழுத்துப்பெயர்ப்பாகும். இதுவே ஆங்கிலம் வழியாக எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டபோது செகோவ் என மாற்றம் பெற்றது. ரஷ்ய மொழி சிரிலிக் (Cyrillic) வரிவடிவத்தில் அமைய, பிரெஞ்சு போன்றவை ரோமன் வரிவடிவத்தில் அமைகின்றன. வரிவடிவ வேறுபாடும் அவற்றின் ஒலிப்பு முறை வேறுபாடும் இந்த வேறுபட்ட எழுத்துப்பெயர்ப்புக்குக் காரணங்களாகும். தமிழ் எழுத்து அமைப்பு இவற்றிலிருந்து வேறுபட்டது. ஒரு மொழியிலுள்ள சொல்லை இன்னொரு மொழியில் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கான தேவை என்ன, எழுத்துப்பெயர்ப்புக்கென்று தமிழில் ஏதேனும் விதிமுறை உண்டா என்ற வினாக்களுக்கு விளக்கம் தரும் வகையில் இப்பகுதி அமைகிறது. மொழிகளிடையே ஏற்படும் தொடர்பால் ஒரு மொழியின் சொற்கள் மற்றொரு மொழியில் பயன்பாட்டிற்கு வரலாம். இவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் பிற மொழிச் சொற்களுக்கு நிகரான சொற்கள் ஒரு மொழியில் இல்லாதபோது அந்த மொழி இந்தச் சொற்களை மூன்று வகையில் எதிர்கொள்கிறது. புதிய சொற்களைப் படைத்தல், சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், எழுத்துப்பெயர்ப்பு செய்தல் ஆகிய இவையே அந்த மூன்று வகை. எடுத்துக்காட்டாக, internet, element, collector என்பவற்றுக்கு இணையாக முறையே தமிழில் இணையம், தனிமம், ஆட்சியர் எனப் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. telephone, software என்பவை முறையே தமிழில் தொலைபேசி, மென்பொருள் எனச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவருகின்றன. |