பக்கம் எண் :

130

இறுதிக்குறிப்புக்கு எடுத்துக்காட்டு அழகர்கோயில்
    
     ஆய்வாளருக்குக் கிடைத்த ‘ராக்காயி வர்ணிப்பு’ என்னும் நாட்டுப்புறப் பாடல்,
பதினெட்டாம்படிக் கருப்பசாமி தன் தங்கை ராக்காயிக்கும் அவள் மக்களுக்கும் தலையில்
உருமால், தோளில் வல்லவேட்டு, அரையில் சுங்குவைத்துக் கட்டிய இறுக்கிய கச்சை,
கையில் கத்தி, ஈட்டி, வல்லயம், வீச்சரிவாள், தோளில் சாத்திய கட்டாரி, காலில் சல்லடம்
ஆகியவற்றோடு காட்சி தந்ததாகக் குறிப்பிடுகின்றது3 (படம் : 32).

     கீழ்க்குயில்குடி, மதுரை சிம்மக்கல் பகுதி காமாட்சியம்மன் கோயில், சுப்பிரமணியபுரம்
பகுதி கருப்பசாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கிழக்குக் கோபுரத்தை
அடுத்துள்ள கருப்பசாமி கோயில் ஆகிய இடங்களில், இரண்டு கைகளோடு நின்ற
கோலத்தில் தலையில் பெரிய உருமால், நெற்றியில் தென்கலைத் திருமண், ஓங்கிய கையில்
வீச்சரிவாள், தொங்கவிடப்பட்டுள்ள கையில் கதை, சங்கு (கொசுவம்) வைத்துக்கட்டியதாக
முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை, மிகப்பெரிய தொந்தி, காலில் செருப்பு
ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார். ‘பதினெட்டாம்படிக் கருப்பசாமி’ என்றே
எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டாலும் மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தை
அடுத்துள்ள கோயிலில் மட்டும். இவர்க்கு முன்னால் பதினெட்டுப் படிகள் சிறியதாக
அமைக்கப்பட்டுள்ளன.

     அழகர்கோயில் நிருவாக அதிகாரியாக இருந்த கே. என். ராதாகிருஷ்ணன்
பதினெட்டாம்படிக்கருப்பசாமிக்குரியதாக ஒரு வடமொழித் தியான சுலோகத்தைக்
கூறுகின்றார்.

     “காலனைப் போல கருநிறம் உடையவனும், இரண்டு தோள்களையுடையவனும், இரு
கைகளில் சுத்தியையும் கதையினையும் ஏந்தியவனும், அழகிய கோரைப்
பற்களையுடையவனும், பயங்கரமானவனும், பயங்கரமான தோற்றத்தையுடையவனும்,
வணங்கியவர்களுடைய பயத்தைத் தீர்ப்பவனும், பாதுகையின் மீதேறி நடமிடுபவனும்,
இளமையானவனும், இளஞ்சூரியனது ஒளியையுடையவனும், சிரித்த முகத்தையுடையவனும்,
ஆயுதத்தினால் மதங்கொண்டவனும், வளைந்த பாதத்தையுடையவனும், சிதறிய கேச
பந்தத்தையுடையவனும், தாமரை போன்ற கண்ணையுடையவனும், கருநிறமுடையவனும், ஆக
கிருஷ்ணபுத்திரனை வணங்குகிறேன்”4 என்பது அவ்வடமொழிச் சுலோகத்தின் பொருளாகும்.