2. சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல் |
| |
0.0 நீண்ட சொல் வடிவங்கள் |
மொழி அமைப்பில் தமிழ் ஒட்டுநிலை வகையைச் சார்ந்தது. ஒட்டுநிலை என்பதால் பெயர்ச்சொல்லோடு வேற்றுமை உருபும் இடைச்சொல்லும் சேரும்; வினைச்சொல்லோடு துணை வினையும் இடைச்சொல்லும் சேரும். இவற்றால் பெயரும் வினையும் நீண்ட வடிவம் கொள்கின்றன. ‘கொடுங்கோன்மை’ என்னும் பெயர்ச்சொல்லோடு ‘இல் + இருந்து + உம்’ ஆகியவை சேர்ந்த ‘கொடுங்கோன்மையிலிருந்தும்’ என்னும் வடிவம் 17 இடங்களை (spaces) நிரப்புகிறது. ‘ஒதுங்கு’ என்னும் வினையோடு ‘இருந்து + இருந்தால் + உம்’ ஆகியவை சேர்ந்த ‘ஒதுங்கியிருந்திருந்தாலும்’ என்னும் வடிவம் 14 இடங்களை எடுத்துக்கொள்கிறது. இவை முறையே பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் எவ்வாறு நீண்ட வடிவங்கள் கொள்கின்றன என்பதைக் காட்டும். ‘ஆதரவு’ என்னும் சொல் அடை ஏற்ற நிலையில் ‘பேராதரவு/பெரும் ஆதரவு’ என்று எழுதப்படுகிறது; ‘பேராதரவு’ என்பதை பிரித்து எழுதுவதில்லை. ‘பெரும் ஆதரவு’ என்பதைச் சேர்த்து எழுதுவதில்லை. ஆனால், ‘ஆதரவு’ என்னும் சொல் ‘அளி’ என்ற வினையை ஏற்ற நிலையில் ‘ஆதரவளி/ஆதரவுஅளி’ என்று இரு முறையிலும் எழுதப்படுகிறது. |
0.1 ஒரே சீராக எழுதாத நிலை |
தற்காலத் தமிழில் ஒரே சீராக எழுதுவதற்கான முயற்சி இல்லை. சேர்த்து எழுதிய சொற்களை அடுத்த வரியிலேயே பிரித்து எழுதிவிடுவதும் இடம்விட்டு எழுதியவற்றை ஒரு பத்தியிலேயே சேர்த்து எழுதிவிடுவதும் உண்டு. ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காத நிலையில் பொருள் சிதையும் இடங்களும் உண்டு. பொருள் சிதைகிறபோது கருத்துத் தடுமாற்றமும் ஏற்படுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டு பொருள் வேறுபாட்டுக்குச் சான்றாகிறது. அப்படியொரு (= இன்ன மாதிரி என்று சொல்லமுடியாத) நாடகமாடினார். அப்படி (= குறிப்பிட்ட மாதிரி) ஒரு நாடகம் அரங்கேறியதா? முதல் வாக்கியத்தில் ‘ஒரு’ என்பதை ‘அப்படி’ என்பதுடன் சேர்த்தும் இரண்டாவதில் இடம்விட்டும் எழுதவில்லை என்றால் பொருள் மாறிவிடும். பின்வரும் எடுத்துக்காட்டும் பொருள் மாற்றத்திற்குச் சான்றாகிறது. அவன்மேல் அடி விழுந்தது. |