இவனைக் காட்டிலும் அவன் மேல். பொருள் உணர்ந்து எழுதுகிறவர்கள் ‘மேல்’ என்பதையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்பதை இந்த எடுத்துக்காட்டு உணர்த்துகிறது. கருத்தைச் சிதைக்காமல் இருக்கும் பொருட்டுச் சொற்களை எழுதுவதில் கைக்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து இங்கே கூறியிருக்கிறோம். பொருள் வேறுபடாத இடங்களில்கூட ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தில் நெறிமுறை ஒன்று உருவாவதற்கு உதவியாக இருக்கும். |
0.2 இடம் போதாதபோது பிரித்தல் வேறு |
மற்றொன்றையும் இங்கே தெளிவுபடுத்த வேண்டும். அச்சிடும்போது ‘வீட்டிலிருந்து’ என்ற சொல், வரியின் முடிவில் போதிய இடம் இல்லாதபோது ‘வீட்டி’ என்று முதல் வரியின் இறுதியிலும் அடுத்த வரியின் முதலில் ‘லிருந்து’ என்றும் பிரிக்கப்படலாம். அச்சிடும்போது சொற்களைப் பிரிக்கும் இந்த முறை குறித்து இந்தக் கையேட்டில் எதுவும் கூறவில்லை. |
0.3 சில பொதுவான போக்குகள் |
இன்று தமிழில் சொற்கள் அவற்றின் இலக்கண வகை தெளிவாகத் தெரியும்படி தனித்தனியாக எழுதப்படுகின்றன. தாம்பரபரணியாற்றங்கரையில் என்று எழுதுவதில்லை. தாம்பரபரணி ஆற்றங்கரையில் என்று பிரித்து எழுதுகிறோம். சங்கரநமச்சிவாயரெழுதிய என்று (எழுவாயையும் பெயரெச்சத்தையும்) சேர்த்து எழுதுவதில்லை. சங்கரநமச்சிவாயர் எழுதிய என்று பிரித்து எழுதுகிறோம். தானமுந் தவமுமாகிய விரண்டறமும் என்பதைத் தற்காலத்தில் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் என்று எழுதுவோம். சொல் வடிவங்களை அறிந்துகொள்ளும்படி சில சந்திகளை நீக்கியும் இடம்விட்டும் எழுதுவது இன்றைய நடை. |