பக்கம் எண் :

111

2.0 இலக்கணத்தில் கவனம்
 
பொருளைத் தாங்கிநிற்கும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டு ஒரு
வரிசையில் அமைகின்றன. சொற்களின் தொடர்பு இலக்கணக் கூறுகளால் அமைகிறது.
எனவே, பொருள் குழப்பம் இலக்கணத்தில் தெளிவில்லாததாலும் ஏற்படும். பொருளில்
கவனம் செலுத்துவது போலவே இலக்கணத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
 
2.1 உருபுகளும் இடைச்சொற்களும்
   
இலக்கணத்தின் மிகச் சிறு கூறுகளைப் பயன்படுத்துவதில்கூடத் தவறுகள்
நேர்ந்துவிடுகின்றன. இந்தத் தவறுகள் நம் கவனத்திலிருந்து தப்பிவிடக்கூடியவை. இந்த
இலக்கணக் கூறுகளின் தவறான பயன்பாடு பொருளைத் தெளிவில்லாமல் ஆக்கலாம்;
உரைநடையின் சீரான போக்கைத் தடைசெய்யவும் கூடும்.
 
2.1.1 உருபு வெளிப்பட வேண்டிய, வேண்டாத சொற்கள்

செய்தித்தாள் தலைப்புகளில் வேற்றுமை உருபு இல்லாததால் பொருளைப் புரிந்து
கொள்வதில் இடர்ப்பாடு நேர்கிறது.
 
(25) வக்கீல் மனைவியைத் தீ வைத்துக் கொல்ல முயற்சி

இங்கு வக்கீல் தன் மனைவியைக் கொல்ல முயன்றாரா அல்லது வக்கீலின் மனைவியை
வேறொருவர் கொல்ல முயன்றாரா என்பது தெளிவாகவில்லை. உள்ளே செய்தியைப்
படித்துப்பார்த்த பின்னரே ‘வக்கீலின் மனைவியைக் கொல்ல முயற்சி’ என்பது தெரிய
வருகிறது. ‘வக்கீலின்’ என்று உருபு வெளிப்பட்டிருந்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.
 
 
(26) இந்திரா கொலை விசாரணைக் குழு அறிக்கை வெளியிட மறுப்பு
இந்தத் தலைப்பும் அறிக்கை வெளியிட மறுத்தது விசாரணைக் குழுவா அந்த அறிக்கையைப்
பெற்றுக்கொண்ட அரசா என்பதைத் தெளிவாக்கவில்லை. செய்தித்தாள் கூற வந்தது
விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட அரசு மறுத்தது என்பதாகும். எனவே,
‘இந்திரா கொலை விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட மறுப்பு’ என வேற்றுமை
உருபை வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.
 
(27) மடேர் மடேரென்று தலையில் அடித்துக்கொண்டு, சுவர் முட்டி