8. சில கூடுதல் விளக்கங்கள்
- வேற்றுமை உருபுகளைப் பெயர்ச்சொற்கள்தாம் ஏற்கும்; வினைச்சொற்கள் ஏற்கா;
இவ்வேறுபாடு பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் நிலவும் அடிப்படையாகும்.
- வினைச்சொல் வினையாலணையும் பெயராக அல்லது தொழிற் பெயராக மாறினால்
வேற்றுமை உருபுகளை ஏற்கும்.
ஓடினான் - வினைச்சொல்
ஓடியவன் - வினையாலணையும் பெயர்
ஓடுதல் - தொழிற்பெயர்
ஓடியவனை, ஓடியவனால், ஓடியவனுக்கு, ஓடியவனின், ஓடியவனது,
ஓடியவனிடத்தில்
ஓடுதலை, ஓடுதலால், ஓடுதலுக்கு, ஓடுதலின், ஓடுதலது,
ஓடுதலில்.
- இலக்கணப் புலவோர்கள் இப்படித்தான் வரவேண்டும் என்று கறாராக (rigid)
இருந்ததில்லை: இப்படியும் வரலாம், அப்படியும் வரலாம் என்று நெகிழ்வாகவே
(flexible) சூத்திரம் செய்துள்ளார்கள். ஓர் உருபு நிற்கவேண்டிய இடத்தில்
வேறோர் உருபு நிற்கலாம்; ஒரு வேற்றுமைக்கு உள்ள பொருள் வேறொரு
வேற்றுமைக்குச் சொல்லலாம். ஓர் எழுதுகோலின் நீலவண்ணத்தை (உள்ளீடு)
எடுத்துவிட்டுச் சிவப்பு வண்ணத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்; நீலவண்ணத்திற்குச்
சிவப்பு வண்ணத்தின் முனையை மாற்றிக் கொள்ளலாம். 1.வண்ணத்தை மாற்றுவது;
2. முனையை மாற்றுவது.
பொருள் மயக்கம்
அரசர்கட் சார்ந்தான்
சார்தல் எனும் பொருளுக்கு 'ஐ' ஆகிய இரண்டாம் வேற்றுமையே உரிமை உடையது.
சார்தல் எனும் பொருள் 'கண்' ஆகிய ஏழாம் வேற்றுமையில் வந்து மயங்கியுள்ளது.
அரசரைச் சார்ந்தான்
என்றே வந்திருக்க வேண்டும்.
|
|
|
|