பக்கம் எண் :

பொது இயல் 119

பசுநிரை
யானைக்கூட்டம்
வீரர்படை
விறகுக்கட்டு
வைக்கோற்போர்
மக்கள்கூட்டம்

தொடரிலக்கணம்

சொல் ஒன்றனோடு ஒன்று பொருட் பொருத்தமுறத் தொடர்வது
தொடர். வண்டித் தொடர் என்றால் ஒன்றுக்கு மேல் வண்டிகள்
தொடர்ந்திருக்க வேண்டும். அதுபோல ஒன்றுக்கு மேல் சொற்கள்
தொடர்ந்திருந்தால் தொடர் என்க. ஒரு சொல்லைக் கொண்டு
தொடர் எனலாகாது.

தொடர் இருவகைப்படும்.

தொகாநிலைத் தொடர் (Non-ellipitcal Compounds).

தொகைநிலைத் தொடர் (Elliptical Compounds).

இருசொற்கள் இருந்து நடுவில் எச்சொல்லும், பொருள்
கொள்ளும்போது மறையாதிருந்தால் தொகா நிலைத் தொடர்
என்போம். கண்ணன் உண்டான் என்னும் இத்தொடரின் நடுவில்
ஒன்றும் மறையவில்லை. ஆதலால், இதைத் தொகாநிலைத் தொடர்
என்கிறோம். ஆனால், துணி கட்டு என்னும் இத்தொடரில் துணியைக்
கட்டு என்று பொருள்படுவதால் ஐ உருபு மறைந்திருக்கிறது.
ஆதலால், துணிகட்டு என்பதைத் தொகை நிலைத்தொடர்
என்கிறோம்.

தொகா நிலைத்தொடரில் இரு சொற்களின் நடுவில் ஒன்றும்
மறைந்திராது; தொகைநிலைத் தொடரில் ஏதாவது மறைந்திருக்கும்.

இரண்டும் தொடர்களாக இருப்பினும் வேறுபாடு காட்டும்
பொருட்டுச் சுருக்கமாகத் தொகாநிலைத் தொடரைத் தொடர் என்றும்
தொகை நிலைத் தொடரைத் தொகை என்றும் கூறுவர்.