பக்கம் எண் :

பொது இயல் 121

சிறிது பேசினாள்.

சிறிது என்பது குறிப்பு வினையெச்சம். குறிப்பு வினையெச்சம்
முதலில் இருப்பதால் இத்தொடர் குறிப்பு வினையெச்சத்தொடர்.

5. பெயரெச்சத் தொடர்

இதிலும் இருவகை உண்டு.

ஒன்று தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்.

பாடிய பையன்.

பாடிய என்பது தெரிநிலைப் பெயரெச்சமாதலால் இத்தொடர்
தெரிநிலைப் பெயரெச்சத் தொடர்.

மற்றொன்று குறிப்புப் பெயரெச்சத் தொடர்.

நல்ல பையன்.

நல்ல என்பது குறிப்புப் பெயரெச்சமாதலால் இத்தொடர்
குறிப்புப் பெயரெச்சத் தொடர்.

குறிப்பு : பகுதி வினைச் சொல்லாயின் தெரிநிலை என்றும்,
பகுதி பெயராயின் குறிப்பு என்றும் அறிக.

6. உரிச்சொல் தொடர்

சாலப் பேசினான்.

சால என்னும் உரிச்சொல் இத்தொடரில் முதலில் இருப்பதால்
இஃது உரிச்சொல் தொடர்.

7. அடுக்குத் தொடர்

போ போ.

போ என்பது உணர்ச்சி மிகுதியால் அடுக்கி வருவதால், இஃது
அடுக்குத் தொடர்.