8. இடைச்சொல் தொடர்
மற்று அறிவாம், இனிப் பேசேன்.
மற்று என்பதும், இனி என்பதும் இடைச் சொற்கள். இவை
இத்தொடர்களில் முதலில் இருப்பதால் இவை இடைச்சொல்
தொடர்கள்.
தொகைநிலைத் தொடர் (தொகை)
(Elliptical Compounds)
1. வேற்றுமைத் தொகை
இதிலும் இரு பிரிவுகள் உண்டு. ஒன்று வேற்றுமை உருபு மட்டும்
மறைந்து நிற்க வருவது.
துணிகட்டு.
இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்கிறது. இஃது
இரண்டாம் வேற்றுமைத் தொகை.
யானைப்பாகன்.
இதுவும் வேற்றுமைத் தொகையே. ஆனால், இதில் உருபுடன்
செலுத்தும் என்னும் பொருட் பயன் தரும் சொல்லும் மறைந்திருக்கிறது.
யானையைச் செலுத்தும் பாகன் என்பது பொருள். இஃது இரண்டாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
மரப்பெட்டி.
மரத்தால் செய்யப்ப்பட்ட பெட்டி என்று பொருள்படுவதால் இது
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
2. உம்மைத் தொகை
செடிகொடி.
இங்கே உம்மை தொக்கி வருவதால் உம்மைத் தொகை. இது
செடியும் கொடியும் என்று பொருள்படும்.
|