பக்கம் எண் :

வலிமிகாமைக்குரிய விதிகள் 241

10. வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. கடிநாய்
என்று சொன்னதும் நம் கண் முன் அந்த நாயின் தன்மை வந்து நிற்கும்.
ஒரு நாய் நேற்றுக் கடித்தது; இன்றும் கடிக்கிறது; நாளைக்கும் கடிக்கும்.
சுடுகாடு காட்டும் மெய்ஞ்ஞானத்தைப் பாருங்கள். முன்னே பிணங்களைச்
சுட்ட காடு, இன்றும் பிணங்களைச் சுடுகின்ற காடு, நாளைக்கும்
பிணங்களைச் சுடும் காடு என்று அத்தொகை பொருள் தருகிறது.
மூன்று காலங்களையும் காட்டும் விகுதிகள் மறைந்து பெயரெச்சத்
தொடர் போல வருவதை வினைத்தொகை இன்னும் விளக்கமாகச்
சொன்னால் வினைச் சொல்லின் பகுதியும் பெயர்ச்சொல்லும் சேர்ந்து
வருவதை வினைத்தொகை எனலாம். வினைத் தொகையில் வலி மிகாது.

சுடுகாடு, இடுகாடு, குடிதண்ணீர், அடுகளிறு, விடுபடை,
ஆடுகொடி, நாட்டுபுகழ், கூப்புகை, உரைகல், ஈட்டுபொருள்.

வினைத்தொகைகளில் வரும் வலி மிகாமல் இருப்பது காண்க.

11. உம்மைத் தொகையில் வரும் வலி பெரும்பாலும் மிகாது.
உம்மை மறைந்து நிற்பது உம்மைத் தொகை.

இட்டலி சாம்பார், யானை குதிரை - உம்மைத் தொகை.

உம்மைத் தொகையில் வரும் வலி மிகாது.

இராப்பகல், இன்பத்துன்பங்கள், ஏற்றத்தாழ்வு.

இவை போன்ற உம்மைத் தொகைகளில் மட்டும் இன்னோசை
கருதி விதிவிலக்காக வலி மிகக் காண்கிறோம்.

12. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகாது.
இரண்டு சொற்கள் நின்று இரண்டாம் வேற்றுமை ஐ உருபு தொக
வருவது இரண்டாம் வேற்றுமைத் தொகை.