பக்கம் எண் :

28நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


கற்குமாறு செய்து வருகின்றன. குழந்தைப் பத்திரிகைகள்,
குழந்தைக் கல்வி முறையும் தமிழறிவும் உளத்தியல் நூலறிவும்
மிக்கவர்களால் நடத்தப்படல் வேண்டும். இவ்வாறு ஆங்கில
நாட்டுக் குழந்தைகளுக்குரிய வெளியீடுகள் நடைபெறுகின்றன.
தமிழ் நாட்டுக் குழுந்தைகளுக்குரிய இதழ்களோ எவ்வித
முறையும் அறியாதவர்களால் எழுதப்படுவதால், தமிழகக்
குழந்தைகள் தவறான தமிழைக் கற்று உருப்பட வழியற்றுக்
கிடக்கின்றன. இதனால், சிறுவர்கள், நல்ல தமிழ் எழுத
முடியாமல் திணறுகிறார்கள். கொச்சைத் தமிழ் இயக்கம்
நாட்டுக்கும் மொழிக்கும் தீமை செய்வதன்றி நன்மை செய்யாது.

தனித் தமிழ் இயக்கம்

தனித் தமிழியக்கம் என்பது மற்றொன்று. இதுதான்
தூய தமிழியக்கம். ‘சுத்த தமிழில் எழுது’ என்பர். சுத்தம்
என்னும் சொல் வடசொல் என்று அறியாதார்.
வடமொழியிலிருந்து தமிழ் வந்தது என்று வடமொழிப் புலவர்
சிலர் கூறிவந்த காரணத்தால் இவ்வியக்கம் தோன்றி வளரத்
தொடங்கியது. வடமொழி வேறு; தமிழ் மொழி வேறு.
வடமொழியினும் தமிழ் மொழி முற்பட்டது என்று
மொகஞ்சொதாரோ, ஹரப்பா புதை பொருட் பண்டங்கள்
காட்டுகின்றன. ஆரியர் சிந்து நதிக்கரைப் பகுதிகளுக்கு
வருவதன் முன்னரே தமிழ், இந்தியா முழுதும் பரவியிருந்தது
என்று முக்கர்ஜி தமது இந்திய வரலாற்று நூலில் கூறுகின்றார்.
கால்டுவெல் பாதிரியாரும் சிவஞான முனிவரும் பிறரும்
வடமொழி வேறு என்றும் தமிழ்மொழி வேறு என்றும்
எடுத்துக் காட்டியுள்ளனர். வட சொற்கள் தமிழில்
காணப்படுவதால் தமிழ் மொழியானது வடமொழியின்
வழிமொழி என்பது தவறு. சங்கநூல்களில் வடசொற்கள்
அருகிப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
புராணங்கள் தோன்றிய காலத்தில் வட சொற்கள் தமிழில்
புகுந்தன; முஸ்லீம் ஆட்சியில் நானூறு உருதுச் சொற்கள்
நுழைந்தன; போர்ச்சுக்கீசியர் காலத்தில் பாதிரி, சன்னல்,
சாவி போன்ற போர்ச்சுக்கீசியச் சொற்கள் வந்தேறின.
ஆங்கிலேயர் ஆட்சியிலே ஆயிரக்கணக்கான ஆங்கிலச்
சொற்கள் தமிழில் இடம் பெற்றன.