மொழியில் நம் முன்னோர்கள் திசைச் சொல் (Foreign Words)
என்று வைத்து அருமையாக அயல் மொழிச் சொற்களைப்
பயன் படுத்தினார்கள்; அச்சொற்களைத் தமிழுக்கேற்றவாறு
மாற்றியும் எழுதினார்கள். அதனால், நாமும் அவ்வாறு
செய்வோம். ‘விற்றா’ என்று எழுதாது, விக்டர் என்று
எழுதினால் தவறில்லை. ஆங்கில உச்சரிப்பின்படி எழுத
வேண்டுமென்று விதி இல்லை. வி.கோ. சூரிய நாராயண
சாஸ்திரியார் பாஷை என்பதைப் பாடை என்று எழுதினார்.
டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் தமிழ்ப் பாஷை என்றே
எழுதி வந்தார்கள். அவர்கள் அக்காலத்து முறைக்கு
இரையானவர்கள். மொழி என்னும் சொல்லிருக்கப் பாஷை
என்று ஏன் எழுத வேண்டும்? இந்திப்பாடை என்று
எழுதாது இந்திமொழி என்று எழுதுவதுதான் பொருத்தமானது.
பத்திரிகைக்கு நாளிதழ் என்பது நாளடைவில் விளங்காமற்
போகாது. இன்று நாளிதழ் என்பது விளங்கியும் வருகிறது.
பஸ் என்பதைப் பேருந்து என்கிறோம். இராமநாதபுரப் பகுதியில்
கார் (Car) என்று மக்கள் பேச்சு வழக்கில் வழங்கப்படுகிறது.
எனவே, முன் குறிப்பிட்டவாறு இன்றியமையாத இடங்களில்
அயல் மொழியைப் பயன்படுத்திக் கூடுமான இடங்களில் தூய
தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தல் வேண்டும். ரப்பர்,
வல்கனைட், பிளாஸ்டிக், எவர்சில்வர் போன்ற
சொற்களைப்
பயன்படுத்துவதில் தவறில்லை. பல மொழிச் சொற்களை
ஏற்ற காரணத்தால் ஆங்கில உரைநடை வளம் பெற்றுள்ளது.
இதனால், நாம் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதில்லை,
இன்றியமையாத பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில்
வெறுப்புக் கொள்ளலாகாது.
முடிவான கருத்து
ஒரு நாளும் பேச்சு மொழிபோல எழுத்து மொழி
அமையாது. கடுமையான முறையில் தூய தமிழ்ச் சொற்களைப்
பயன் படுத்தினால், எழுதுவது பொதுமக்களுக்கு விளங்காது.
புரியும் தமிழில் எழுத்துப் பிழை, சொற்பிழை, சந்திப்பிழை
முதலியன இன்றித் தமிழ் மரபு குன்றாது பெரிதும் தமிழ்ச்
சொற்களால் தமிழ் உரைநடை அமைய வேண்டும் என்பதே
முடிவான கருத்து.
|