பக்கம் எண் :

38நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


மதிக்கப்பட வேண்டுமெனின் நடைமுறை இலக்கணத்தையாவது
நன்கறிந்து கொள்ள வேண்டும். பண்டைத் தமிழருடைய
கூரிய மதியையும் விரிந்த மனப்பான்மையையும் விஞ்ஞான
அறிவையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் நடைமுறை
இலக்கணத்தையாவது கற்க வேண்டும். தண்டமிழ் இலக்கியப்
பூஞ்சோலையில் புகுந்து இனிய தென்றலை நுகரவும். பல
மலர்களைக் கண்டு களிக்கவும் அப்பூஞ்சோலை வாயிலைத்
திறப்பதற்கு இலக்கணத் திறவுகோல் வேண்டும். நாட்டிலே
நல்ல தமிழைப் பரப்ப வேண்டிய நல்லெண்ணம் இருக்குமாயின்
நடைமுறை இலக்கணத்தையாவது கற்றல் வேண்டுமென வற்புறுத்த
விரும்புகிறேன். தமிழ் இலக்கணத்தை - அறிவியல் முறையில்
அமைந்திருக்கும் அருந்தமிழிலக்கணத்தை - அறிவைக்
கூர்மையாக்கும் செந்தமிழ் இலக்கணத்தை எளிதாகக் கற்கலாம்;
கற்க இயலும், அஞ்ச வேண்டுவதில்லை.