பக்கம் எண் :

39


5. அளவான இலக்கணம்

ஓர் ஊரில் இலக்கணப் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவர் வயதாகிக் கண் இழந்திருந்த காலத்தும் படித்த
இலக்கணத்தை ஆராய்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது வழக்கம்.
ஒரு நாள் வீட்டிலிருந்தவர்கள் வெளியூருக்குச் சென்றிருந்தபோது,
இரவு நேரத்தில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்தான்.
காலடியோசையைக் கேட்டுக் குருட்டுக் கிழவர்," யார்
போகிறார்?" என்றார். வீட்டிற்குள் நுழைந்த திருடன், ‘சோ’
என்று சொல்லிவிட்டுப் புகுந்தான். புலவர், "சோ என்றால்
என்ன பொருள்? இஃது ஓரெழுத்து ஒரு மொழியன்றோ?"
என்று ஆராயத் தொடங்கினார். திருடன், வீட்டில் இருந்த
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே போனபோது,
கிழவர் காலடியோசை கேட்டு, "யார்?" என்றார். திருடன்,‘ரன்’
என்றான். சோ + ரன் என்னும் இரண்டையும் சேர்த்துச்
சிந்தித்துப் பார்த்துத் திருடன் என்று பொருள் கண்டார் கிழவர்.
அவர் அண்டை வீட்டாரை உதவிக்கு அழைப்பதற்குள் திருடன்
ஓடிவிட்டான்.

மற்றோர் இலக்கணப் புலவர், ‘தந்தி தபால்` என்னும்
பொருள் குறித்துக் கட்டுரை எழுதக் கேட்டிருந்ததைக் கண்டு
‘தந்தித பால்` என்று பிரித்து, "ஐம்பாலில் இது சேரவில்லையே"
என்று தொல்லைப்பட்டாராம்.

இப்படியெல்லாம் ஒருவரும் ஆராய்ச்சி நடத்தவும்
வேண்டுவதில்லை; தொல்லைப்படவும் வேண்டுவதில்லை.
பிழையின்றி எழுத நடைமுறைக்கு வேண்டிய அளவு
இலக்கணம் படித்துக் கொண்டால் போதும். எவரும் அஞ்சி
நடுங்கி அலற வேண்டுவதில்லை. படித்துப் பாருங்கள்;
பயனடைவீர்கள்.