|
36.
பொருளணிகள்
அழகு பெறச் செய்வது அணி, அது சொல்லணி, பொருளணி
என இருவகைப்படும். சொல்லணி சொல்லால் அமைவது. சிலேடை,
மடக்கு முதலியவை சொல்லணியைச் சேர்ந்தவை. பொருளணி
என்பது பொருளால் அமைவது. தன்மை நவிற்சி அணி, உவமை
அணி, எடுத்துக் காட்டு உவமை அணி முதலியவை பொருளணியின்
வகையாகும்.
தன்மை நவிற்சி அணி
உள்ளதை உள்ளவாறு அழகாக எடுத்துரைப்பது தன்மை நவிற்சி
அணி.
‘‘இரவு முழுவதும் காற்று அடித்துக் கொண்டிருந்தது.
மழையோ மிகுதியாகப் பெய்யச் சதுப்பு நிலம் முழுதும் வெள்ளம்
புரண்டது. ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி
நின்றது. காலையில் இளஞ்சூரியன் பொன்னொளி வீசிக்கொண்டு
அமைதியுடன் வந்து கொண்டிருந்தது. காட்டில் பறவைகள்
பாடிக்கொண்டிருந்தன. கீதமினிய குயிலின் குரல் எதிரொலி
செய்து கொண்டிருந்தது. காகங்கள் ‘கா கா’ எனக் கரைந்து
கொண்டிருந்தன. அருவியின் ஒலியும் காற்றின் ஒலியுடன் கலந்தது.
வானம் புன்னகை செய்து கொண்டிருந்தது. தரையில் இருந்த
புல்லில் மழைத்துளிகள் முத்துகள் என நின்று சூரிய ஒளியில்
மிளிர்ந்தன. சூரியனுடைய ஒளியைக்கண்டு மகிழ்ந்த முயல்
மகிழ்ச்சியுடன் புதரிலிருந்து வெளியேறித் தாவித்தாவி
ஓடிக்கொண்டிருந்தது. தாவிய போதெல்லாம் சிதறிய நீர்த்துளிகள்
பகலோன் ஒளியில் மின்னிப் பனித்திரைபோல அதை மூடிக்கொண்டு
தொடர்ந்தது.”
|