பக்கம் எண் :

428நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


உவமை அணி (Simile)

இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை விளங்கச்சொல்வது
உவமையணியாகும்.

உவமானம், உவமேயம், பொதுத் தன்மை, உவம உருபு
ஆகிய நான்கும் இருப்பது விரி உவமை எனப்படும்.

பால் போலும் இனிய சொல்.

பால்-உபமானம்; சொல்-உபமேயம்; இனிய என்பது
பொதுத்தன்மை; போலும்-உவம உருபு, உப-அருகில்; மானம்-அளவு.
அருகில் வைத்து அளக்குங் கருவியாயிருப்பது உபமானம்;
அளக்கப்படுவது உபமேயம், உபமானத்தை உவமானம் என்றும்,
உபமேயத்தை உவமேயம் என்றும் கூறுவதுண்டு.

தொகை உவமை என்பது பொதுத்தன்மையும் உவம உருபும்
தொக்கி அஃதாவது இல்லாமல் வருவது. சில வேளைகளில் இந்த
இரண்டில் ஒன்று மட்டும் மறைந்தும் வரும்.

பால் போலும் சொல்.

மலை போன்ற தோள்.

புதிய உவமைகள்

1. அப்போது அவளுடைய முகம், கதிரவன் மறைந்த பிறகு
நீலக்கடலில் தோன்றும் நிறைமதியைப் போலப் பசும்பொன் ஒளி
வீசிக் காட்சியளித்தது. இப்போது அதிகாலை நேரத்தில் மேற்குத்
திசையில் மறையும் மதியைப்போல வெளிறிய பொன்னிறமாயிருக்கிறது.

2. பளீரென்று மின்னல் மின்னி மறைவது போலப் பத்மாவின்
முகம் கம்பிகளுக்குப் பின் தோன்றி மறைந்தது.

3. எவ்வளவு நேரம் என்று ஒரு குரல் கூப்பிட்டது. அதைக்
கேட்டு இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெருப்பை மிதித்தவன்
போலத் துள்ளித் திரும்பிப் பார்த்தான்.