பக்கம் எண் :

பொருளணிகள் 429

4. சுவாசப் பையிலுள்ள சிறு கண்ணறைகள் பிராணவாயுவை
உட்கொண்டு உடலிலுள்ள் கெட்ட இரத்தத்தைத் துப்புரவு செய்வன
போல, ஆயிரக்கணக்கான நம் குக்கிராமங்கள் அவ்வப்போது நம்
நாட்டின் கேடுகளை நீக்கி நமது வாழ்வை மேன்மைப்படுத்தி
வந்துள்ளன.

5. அலை இயங்கும் கடலில் பவளக்கொடிகள் அவ்வலைகளால்
கேடுறாமல் மேன்மேலும் படர்ந்து நிலைத்திருப்பன போல, நம்
கிராமங்களும் பலவகைக் கேடுகளுக்கும் தப்பி நிலைத்து அழியாத
நல்வளத்தை நம் நாட்டுக்கு அளித்து வந்துள்ளன.

எடுத்துக்காட்டு உவமை அணி

உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி வாக்கியமாக
நிறுத்தி இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு
உவமை அணியாகும். இது செய்யுளில் மட்டும் வரும்.

‘‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

(எழுத்துகள் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையவை.
அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது.)

இல்பொருளுவமை அணி

உலகத்தில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவது
இல்பொருளுவமை அணி எனப்படும்.

கருமலை நடந்து வந்தாற்போலக் கருநிற விபீஷணன் நடந்து
வந்தான்.

தற்குறிப்பேற்ற அணி

இயற்கையாக நடப்பதில் கவி தன் கற்பனைக் குறிப்பை ஏற்றிச்
சொல்வது தற்குறிப்பேற்ற அணியாம்.