பக்கம் எண் :

சிறுகதை எழுதுதல் 437


வெளிவந்துள்ளன. இந்நாளிலும் தமிழகத்தில் தமிழறிவு மிக்குள்ள
எழுத்தாளர் சிலர் சிறந்த முறையில் சிறுகதைகளை எழுதி
வருகின்றனர்.

நல்ல தமிழில் கதையமைக்கும் திருவும் கற்பனை வளமையும்
குணம் அமைக்கும் முறையும் இயற்கையாக வருணிக்கும் இயல்பும்
இனிய மொழி நடை எழுதும் திறனும் உள்ளவர்கள். சிறுகதை
எழுதும் முயற்சியில் ஈடுபட்டால், கட்டாயம் வெற்றி பெறக்கூடும்.
‘அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா ஆகலாம்’ என்னும் கதை
போல இருக்கிறது இங்கே கூறுவது என்று சிலர் கருதலாம்.
இத்தகைய ஆற்றல்களை இயல்பாகப் பெற்றவர்களே இந்தச் சிறுகதை
இலக்கியத் துறையில் சிறப்படைய முடியும் என்பது மறுக்க முடியாத
உண்மை. தமிழ்ப் புலமை மிக்கவர்கள் எல்லாரும் தக்கதொரு சிறு
கதை இலக்கியத்தை நலமுற இயற்ற முடியும் என்பது தவறான எண்ணம்.
புலமை வேறு; சிறுகதை எழுதும் திறமை வேறு. சிறுகதை எழுதத்
தனித் திறமை வேண்டும்.

சிறுகதை சிறிதாக இருக்கவேண்டும். 800 முதல் 2000
சொற்களுக்குள் அமையும் சிறுகதை நன்றாக இருக்கும்;
வேகமுடையதாகவும் இருக்கும். அது சிறிது நீண்டு விட்டாலும்
தவறில்லை. ஆனால், அது நெடுங்கதை போல நீண்டு விடக்கூடாது.
வீணான வருணனைகள் இல்லாமல் சொற் சிக்கனம் சிறுகதைக்கு
மிகவும் வேண்டும். ஒரே ஒரு கருத்தை மையமாகக் கொண்டு அதைப்
பின்னியே நிகழ்ச்சி, வருணனை ஆகியவை சிறுகதையில் அமைந்திருக்க
வேண்டும். கதை மாந்தர்களின் பல குணங்களை விவரிக்காமல் ஏதாவது
சிறப்பாகக் கருதுகின்ற ஒரு குணத்தையே கருவாக அமைத்துக் கதை
நிகழுமாறு எழுத வேண்டும். எடுத்துக் காட்டாகக் குழந்தையின் மீது
தாய்க்குள்ள அன்பினால் தன்னைத் தியாகஞ்செய்யும் பண்பைக்
கருவாக அமைத்துச் சிறுகதை எழுதுவதைக் குறிப்பிடலாம்.