பக்கம் எண் :

438நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஒருவரது வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் காதலுடன்
பின்னிப் பிணைத்துத் திரையிட்டுக் கொண்டு விரிவாக நடந்து செல்லும்
நெடுங்கதையாகிய நவீனத்தைப் போல இல்லாது, சிறுகதை
கலைத்திறனுடன், சுருங்க இயங்கி வரவேண்டும். சிறுகதை எழுதும்
ஆசிரியரே கதை மாந்தர் குணங்களை அவர்களுக்கு அமைக்கும்
உரையாடலால் வெளிப்படுத்த வேண்டுமேயன்றித் தாமே இடையிலே
திடீரென்று நுழைந்து குணங்களைக் சித்தரிக்கலாகாது.

கலை நுட்பத்துடன் கதையமைப்பும் குணவமைப்பும் பிற்புல
அமைப்பும்
(background) இயற்கை வருணனையும் சிறுகதையில்
இருக்க வேண்டுவனவாகும். வருணனை இயற்கையாக இருக்க
வேண்டும். கதைக்கு வேண்டாத சொற்களையும் வருணனைகளையும்
நீக்கிவிட வேண்டும்.

சிறு கதைக்குத் தொடக்கம், இடை, முடிவு ஆகிய பகுதிகள்
உண்டு. ‘முன்னொரு காலத்தில்’ என்று தொடங்கும் பண்டைக் காலக்
கதைத் தொடக்கம் போல இல்லாமல் தொடக்கமானது முதலிலேயே
படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைய
வேண்டும். எந்தப் பொருள் சிறுகதையில் கருவாக இருக்கிறதோ
அந்தப் பொருள் அமையுமாறு முதல் பத்தி (Paragraph) இருக்கலாம்.
கதைத் தொடர்ச்சியை நிறுத்தப் படிப்பவர் உள்ளத்தில் ஆவலை எழுப்ப
இடைப் பகுதியில் இடவருணனை, சொல்ல வேண்டிய செய்திகள்
இவற்றைப் புகுத்த வேண்டும். முடிவு கதையின் சுருக்கமாக,
சுருக்கமெனத் தெரியாத முறையில், அமைய வேண்டும்.
சொல்லுகிற ஒவ்வொன்றும் மையக் கருவுக்கு ஒட்டியதாகவே இருக்க
வேண்டும்.

கதை உயிருள்ளதாக அமைய வேண்டும் என்பதைக் கதை
எழுதுவோர் ஒரு நாளும் மறத்தலாகாது. படைப்பின் ஒளி