கதையில் வீச வேண்டும். சொல்லும் முறை, கருத்துகளைப் பயன்படுத்தும்
திறமை இவைகளினாலேதான் எழுதும் கதை சிறப்புறும்.
புளித்துப்போன பழைய பொருளமைப்புச் சிறுகதை எழுதினால்
வெற்றியடைவது முடியாது. சிறு கதை எழுதுவதில் பலவித முறைகள்
இக்கால எழுத்தாளர்களால் கையாளப்படுகின்றன. படிப்பவர்கள்
கதையோடு ஒன்றிக் கலந்துவிடுமாறு சிறுகதை அமைந்தால்தான்
வாசகர்களுக்குக் கதையில் விருப்பம் ஓடும். ஆதலால், படிப்பவர்கள்
கதையில் படிந்துவிடுமாறு செய்ய வேண்டும்.
காதல், சிறுகதைக்கு இன்றியமையாததாகக் கருதவேண்டுவதில்லை.
காதல் இல்லாத கதையும் எழுதலாம். பெண்ணில்லாத சிறுகதை
மண்ணில் இல்லை என்று எண்ணிப் பெண்களையே கதை மாந்தர்களாக
வைத்து எழுத வேண்டுமென்பதில்லை. ஒரு காலத்தில் வியப்புணர்ச்சி,
அச்ச உணர்ச்சி, பரபரப்புணர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய
சிறுகதைகளைப் பலர் எழுதி வந்தனர். இக்காலத்தில் அன்றாட
வாழ்க்கையில் காணப்படும் வாழ்க்கைச் சிக்கல்கள், உடல் - மனப்
போராட்டம் முதலியவை கருவாக அமைந்துள்ள கதைகளே எழுத
வேண்டும். கதையில் தற்செயல் சம்பவங்களும் மனிதத் தன்மைக்கு
மேற்பட்ட நிகழ்ச்சிகளும் அமையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நம்பக் கூடிய நிகழ்ச்சிகள் இருந்தால்தான் ஒருவருக்குக் கதைகளைப்
படிக்கச் சுவை தோன்றும். முக்கியமாகக் கதை மாந்தர்கள் கதையைப்
படிப்பவர்களின் அனுதாபத்தைப் பெறவேண்டும். பொதுவாகச்
சிறுகதைகளானவை வாழ்க்கையில் காணப்படும் உண்மைகளை
அடிப்படையாகக் கொண்டு இயற்கைக்கு மாறுபடாமல் படிக்க
விருப்பம் ஊட்டுவனவாய் அமைய வேண்டும் என்று சுருங்கக்
கூறலாம்.
|