காரண இடுகுறிப்பெயர்
காரண இடுகுறிப்பெயர் என்பதும் ஒன்று உண்டு. ஒரு
பெயர் காரணமுடையதாய் இருந்தும், அஃது அக்காரணமுடைய
பலவற்றிற்கும் செல்லாது, ஒன்றற்கே உரியதாய் வருவது காரண இடுகுறிப்
பெயர் என்பது.
நாற்காலி, காற்றாடி, முள்ளி.
நான்கு கால்களையுடைய கட்டில் முதலியவை பல இருப்பினும்,
நாற்காலி என்பது ஒருவகை இருக்கைக்கே இடுகுறியாக அமைகிறது.
இப்படி வருவது காரண இடுகுறிப்பெயர். இது போல் மற்றவற்றிற்கும்
கொள்க.
I. குறிக்கும் பொருள் பற்றிய பெயர்கள்
இப்படி இடுகுறியாகவோ காரணமாகவோ வரும் பெயர்களைக்
குறிக்கும் பொருள் கருதியும், பிறப்பு நோக்கியும், சொற்கள்
பயன்படுந்தன்மை கருதியும் பலவாறாகப் பிரிப்பதுண்டு.
1. பொருட்பெயர் (Nouns of Things)
பொருளைக் குறிப்பது பொருட்பெயர். இஃது உயர்திணையாகவும்
இருக்கும்; அஃறிணையாகவும் இருக்கும்.
கண்ணன், வள்ளி, நாய்.
2. இடப் பெயர் (Nouns of Places)
இடத்தைக் குறிப்பது இடப்பெயர்.
வீடு, கல்லூரி, மதுரை.
3. காலப் பெயர் (Nouns of Days Year, etc.)
காலத்தைத் காட்டுவது காலப்பெயர்.
திங்கட்கிழமை, ஆடித்தி்ங்கள், பகல்.
4. சினைப் பெயர் (Nouns of Parts of a Whole)
சினையைக் காட்டுவது சினைப்பெயர். சினை-உறுப்பு.
கை, தலை, இலை, கிளை.
|