உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான பெயர்கள்
தாய், தந்தை ஆகிய இரு பெயர்களும் உயர்திணை, அஃறிணை
இரண்டிலும் பயன்படுத்தப்படும். இத்தகைய பெயர்களை விரவுப்
பெயர்கள் என்பர்.
உயர்திணை
தந்தை இவன்
தாய் இவள் |
அஃறிணை
தந்தை இந்த எருது
தாய் இந்தப் பசு |
பால்பகா அஃறிணைப் பெயர் (Common Irrational Noun)
ஒன்றன்பால் என்றும், பலவின்பால் என்றும் பகுக்க முடியாதபடி
வரும் அஃறிணையே பால்பகா அஃறிணை எனப்படும்.
ஒரு தேங்காய் வாங்கினேன்.
நூறு தேங்காய் வாங்கினேன்.
‘நல்லான் மலர்ப்பாதம் என் சிந்தையுள்.
நின்றனவே’ - தேவாரம்.
ஒரு தேங்காய் - இதில் ஒரு என்பதைக் கொண்டு தேங்காய்
ஒன்றன்பால் என்போம். நூறு தேங்காய் - இதில் நூறு என்பதைக்
கொண்டு தேங்காய் பலவின்பால் என்போம். மலர்ப்பாதம்... நின்றனவே -
இங்கு நின்றனவே என்னும் பன்மை வினையைக் கொண்டு மலர்ப்பாதம்
என்னும் தொடருக்கு மலர்ப்பாதங்கள் என்று பொருள் கொள்வோம்.
இவ்வாறு ஒன்றன்பால் என்றும், பலவின்பால் என்றும் பகுக்க
முடியாதவாறு அஃறிணையில் வரும் மரபு தமிழில் உண்டு ஆதலால்,
உரைநடையில் நூறு தேங்காய் வாங்கினேன் என்றும், ஆயிரம் ரூபாய்
பரிசு பெற்றார் என்றும், பத்து டன் விறகு விற்றேன் என்றும் எழுதுவதே
முறை என்பதறிக. இப்படி எழுதுவதே தமிழ் வழக்கு.
|