பக்கம் எண் :

78நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

படர்க்கைச் சொல் முன்னிலைச் சொல்லோடு இயைந்த வழி
முன்னிலைப் பன்மை வினைமுற்றால் முடிதல் வேண்டும். இவ்வாறு
சேனாவரையர் சொல்லதிகாரத்தின் 463-வது நூற்பா உரையில்
புறனடையால் கொள்ளப்படுவனவாகக் குறிப்பிடுகையில் தன்மையிடத்தவர்
ஏனை இடத்தவரை இணைத்துக் கூறும்போது தன்மைப் பன்மை
வினைமுற்றும், முன்னிலையார் படர்க்கையாரைச் சேர்த்துக் கூறும்
போது முன்னிலைப் பன்மை வினைமுற்றும் பெற்றவாக்கியங்களைக்
காட்டியிருக்கிறார். நச்சினார்க்கினியரும் வினை இயல் 204-ஆம்
நூற்பா உரையில் மேற்கண்டவாறு வரும் உதாரணங்களைக்
காட்டியிருப்பதையும் காணலாம்.

வேற்றுமை
(Case)

ஒரு பொருளை ஒருகால் வினை முதலாக்கியும். ஒருகால்
செயப்படு பொருளாக்கியும், ஒருகால் கருவியாக்கியும், ஒருகால்
ஏற்பதாக்கியும், ஒருகால் நீங்க நிற்பதாக்கியும், ஒருகால் உடையதாக்கியும்,
ஒரு கால் இடமாக்கியும் வேறுபடுத்தலான் வேற்றுமை எனப் பெயர்
பெற்றதாயத் தெய்வச்சிலையார் விளக்கியுள்ளார். பெயர்ச்சொல்லின்
பொருளை வேறுபடுத்துவதே வேற்றுமை
(Case) எனலாம். இயல்பாய்
நிற்கும் பெயர்கள் வாக்கியங்களில் வரும்போது அவற்றின் பொருள்
திரிந்துவரும். இதுதான் வேற்றுமை, இப்படித் திரிவதற்கு அறிகுறியாகப்
பெயர்களின் இறுதியில் சில எழுத்துகளோ சொற்களோ சேர்க்கப்படும்.
இவ்வாறு சேர்க்கப்படும் எழுத்துகளையும் சொற்களையும் உருபுகள்
(Casal -
endings or casal signs)
என்பர். வேற்றுமையைக் காட்டும் உருவங்களே
உருபுகள் என்பதறிக. பெயர்ச் சொற்களே வேற்றுமை உருபை
ஏற்குமேயன்றி, வினைச் சொற்கள் வேற்றுமை உருபை ஏற்கமாட்டா
என்றும் அறிக.

கீழ்வரும் எடுத்துக் காட்டுகளைக் காண்க.

1. சீவகன், சிந்தாமணிக் காப்பியத் தலைவன்.

2. சீவகனைக் கந்துக்கடன் வளர்த்தான்.