பக்கம் எண் :

தமிழர் மதம் 31

New Page 2
     "பெருநில முழுதாளும் பெருமகன் றலைவைத்த  
      வொருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்  
      வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான்  
      இருநிதிக் கிழவன்..........................................." (1 : 31-34)

என்று சிலப்பதிகாரங் கூறுதல் காண்க.                                  

    வண்ணார் வணங்கும் தெய்வம் மயிலார் எனப்படும்.

2. பெருந்தேவ மதம்

    ஐந்திணைத் தெய்வ வணக்கங்களுள், இரண்டே மதமாக வளர்ச்சியடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவமதமும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும் தோன்றின. விண்ணுலக வேந்தன் கொள்கையின் பின் எங்கும் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும், நீரின் கூறாக மால்(மாயோன்) என்றும் பெயரிட்டு இறைவனை வழிபட்டனர்.

(1) சிவமதம்

இறைவன் பெயர்

    சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தி னின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன.

    சுல் - சுள், சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள் - சுள்ளை -கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய்.

    சுல் - செல் - சேல் = செந்நிறக் கெண்டைமீன்.

    சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண்.

    நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந் நிறத்தைக் குறித்தது.

    ஒ.நோ: எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = 1. சிவந்த முருக்க மலர். "எரிமலர்ப் பவளச் செவ்வாய்" (சீவக. 602). 2. செந்தாமரை. "செல்வ னெரிமலர்ச் சேவடியை" (சீவக. 2741).

    செல் - செள் - செட்டு - செட்டி  =  1. சிவந்த அடியை யுடைய வெட்சிச் செடி. "செங்கால் வெட்சி" (திருமுருகு. 21). 2. முருகன்.

    செள் - செய் - செய்யவன் = 1. சிவந்தவன். 2. கதிரவன். 3. செவ்வாய். செய்யன் = முருகன்.

    செய்யாள் (செய்யவள்) = செங்கோலத் திருமகள்.