பக்கம் எண் :

தமிழர் மதம் 89

New Page 1

யென, இக் காலக் கொண்முடிபர் கூறுவர். தூவொருமையை வெள் ளொருமை எனினும் ஒக்கும்.

    இறைவனொடு ஆதன் இரண்டறக் கலந்ததெனின், பின்னதன் இன்பநுகர்ச்சிக் கிடமில்லை. இரண்டும் வெவ்வேறெனின், இறை வனின் எங்கும் நிறைந்த தன்மைக்கு இழுக்காகும். ஆகவே, சிறப்பொருமை என்பதே உத்திக்குப் பொருந்துவதாகும்.

    ஒருமையும் இருமையும் ஆரியராற் புகுத்தப்பட்ட கொள்கை கள். சிறப்பொருமை இராமானுசாச்சாரியரால் திருமாலியத்திற் புகுத்தப்பட்டதேனும், அதுவே பழந்தமிழ்க் கொள்கையாகும். ஆரியக் கொள்கைகள் தோன்றும்வரை, அது கூறப்படத் தேவை யின்றி மறைவாயிருந்தது. முக்கொள்கையையுந் தழுவியது தூவொருமையென்பது, முரண்பட்டதும் கோமுட்டி சான்றுரை போன்றதுமாகும்.

    இறைவனின் நிழல்வடிவே எல்லாப் பொருள்களுமென்றும், காண்பனவெல்லாம் கனவிற் கண்டவைபோலப் பொய்யென்றும், இம் மெய்யுணர்வைப் பெற்றவளவிற் பிறப்பின்றி வீடுபெறலா மென்றும், கூறுவதெல்லாம் பிதற்றல்களும் பித்துரைகளுமே.

    இறைவனும் ஆதனும் ஒன்றென்று சொல்லிக்கொண்டே, நால்வேறு  மக்கள் வகுப்பும் பிராமணவுயர்வும் பிறப்பிலமைந்தவை யென்று கூறுவது, எத்துணைத் தன்முரணும் நெஞ்சழுத்தமுமான கூற்றாம்!

(17) மதப் பிரிவுகள்

    சிவனியம், மாலியம் என இரண்டாகவே யிருந்த மதங்கள், குமரனியம்(கௌமாரம்), ஆனைமுகவம்(காணபத்தியம்), கதிரவம் (சௌரம்), காளியம்(சாக்தம்) என்னும் நான்கொடு ஆறாயின.

    சிவனியத்திற்குள்ளேயே, அகச் சமயம் ஆறென்றும் அகப் புறச் சமயம் ஆறென்றும் பன்னிரு பிரிவுகள் தோன்றின.

    அபிதான சிந்தாமணியார் ஊர்த்த சைவம், அனாதிசைவம் முதலிய பதினேழ் சிவனியப் பிரிவுகளைக் கூறியுள்ளனர்.

    பாசண்டம் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு(9 : 15), தொண் ணூற்றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று பொரு ளுரைத்துள்ளார் அடியார்க்குநல்லார்.

     "தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்"  (வளையாபதி)
   
     "பாசண்டத் துறையும் இவற்றுட் பலவாம்  
      பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே" (திவா. 12ஆவது)