பக்கம் எண் :

3

"இல்லற மல்லது நல்லற மன்று"
என ஒளவையாரும்,
 
"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"
    (49)
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"
        (46)

என்று திருவள்ளுவனாரும், கூறினார் என்க.

    அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந் நன்றி யறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்பன இல்லற வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட அறங்களாதலின், இவையனைத்தையுங் கைக்கொள்வார் வீட்டுலகை யடைதற்கு எள்ளளவும் ஐயமின்றாம்.

    ஆயினும், மக்கள்தொகை மிக்கு மாநில முழுதும் இடர்ப்படும் இக்காலத்தில், துறவறஞ் சிறந்ததென்று கூறித் துறவியரை ஊக்குதல் வேண்டும் என்றே தோன்றுகின்றது.

4. திருமணமும் கரணமும்

    ஓர் ஆடவனும் ஒரு பெண்டும், கணவனும் மனைவியுமாக இல்ல றம் நடத்த இசைந்து ஒன்றுசேர்வதே மணமாம். மணத்தல் கலத்தல் அல்லது கூடுதல். மணவாழ்க்கைக்கென்றே இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருப்பதாலும், அதனிடத்து மிகுந்த அறப் பொறுப்புள்ளமையாலும், அது ஆயிரங் காலத்துப் பயிர் ஆகையாலும், வாழ்க்கைத் துணைவர் இருவரும் தெய்வத்தின்முன் அல்லது தெய் வத்தின்பேரில் பலரறிய ஆணையிட்டுக் கூடுவதாலும், மணம் தெய்வத்தன்மை பெற்றுத் திருமணம் எனப் பெற்றது. இப் பெயர், பின்னர், திருமணத் தொடர்பான விழாவையுங் குறித்தது.

    திருமணத்திற்குரிய ஒப்பந்த அல்லது தாலிகட்டுச் சடங்கு கரணம் எனப்படும். கரணம் செய்கை. அது ஆட்சிபற்றிச் சடங்கை உணர்த் திற்று. கரணத்தோடு கூடிய திருமணத்தை வதுவை மணம் என்பது இலக்கிய வழக்கு.

    முதற் காலத்தில், எல்லா ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் விலங்கும் பறவையும்போலக் கரணமின்றியே கூடி வாழ்ந்து வந்தனர். ஆயின், சில ஆடவர், தாம் மணந்த மகளிரை மணக்க வில்லையென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்தும் வந்ததினால், மக்கள்மீது அருள்கொண்ட தமிழ முனிவர், கரணம் என்னும் திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். மண மகன், மணமகளைத் தன் நிலையான வாழ்க்கைத் துணையாகக் கொள்வ தாக, பலரறியக் கடவுள் திருமுன் சூள் (ஆணை) இடுவதே கரணமாம்.