பக்கம் எண் :

75


ஒரு கடலில் மற்றொரு கடலைப் புகவிட்டோன், தன் குருதியை உண்ண வளித்தோன், காற்றைப் பணிகொண்டோன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், வானவூர்தி செலுத்தினோன், அரசர் சூளா மணி, வீரவாதித்தன், சூரவாதித்தன் முதலியோர்.

    மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை. சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

    சரித்திரத்திற்கு பிற்காலத்தவர்: உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகாலன், கிள்ளிவளவன், தித்தன், பெருங்கிள்ளி, நல்லுத் தரன், கோப்பெருஞ் சோழன், கோச்செங்கட் சோழன் முதலியோர்.

    இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.

    கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 6ஆம் நூற்றாண்டுவரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், 6ஆம் நுற்றாண்டி லிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக் குட்பட்டிருந்தது.

சரித்திரத்திற் குட்பட்டோர்

    விஜயாலயனும் 1ஆம் ஆதித்தனும் (850 - 907), 1ஆம் பராந்தகன் (907), இராஜாதித்தன் (947), கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985), 1ஆம் ராஜராஜன் (985 -1014), இராஜேந்திர சோழதேவன் (1012), இராஜாதி ராஜன் (1018), விஜய இராஜேந்திரதேவன் (1052), இராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070), 1ஆம் குலோத்துங்கன் (1070), விக்கிரமச்சோழன் (1118), 2ஆம் குலோத்துங்கனும் 2ஆம் இராஜராஜனும் 2ஆம் இராஜாதிராஜனும் (1143 - 78), 3ஆம் குலோத்துங்கன் (1178), 3ஆம் இராஜராஜன் (1216), 3ஆம் இராஜேந்திரன் (1246).

    இவருள், இராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிப்படுத்தி ஈழம் (இலங்கை), கடாரம் (பர்மா) முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்.

    மாறவர்மபாண்டியன் 1222-லும், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1267-லும் சோணாட்டைக் கொண்டனர்.

    பின்பு முறையே, துலுக்கர், உடையார், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் என்பவர் சோணாட்டைக் கைக்கொண்டனர்.

    3. சேரர்: பாரதப்போரில் இருபடைகட்கும் சோறு வழங்கியவன் பெருஞ்சோற்றுதியஞ்சேரலாதன்.

    சேரர், கரூர் வஞ்சி கொடுங்கோளூர் முதலிய நகர்களை முறையே தலைநகராகக் கொண்டிருந்தனர்.