பக்கம் எண் :

தமிழர் வரலாறு-1107

பார்ப்பன வாகை, வாணிகவாகை,வேளாண்வாகை, பொருந வாகை, அறிவன்வாகை, தாபதவாகை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை,கிணைநிலை என்று வாகைப் படலத்திலும்; மல்வென்றி,உழவன்வென்றி, ஏறுகொள்வென்றி, கோழிவென்றி,தகர்வென்றி, யானைவென்றி, பூழ்வென்றி,சிவல்வென்றி, கிளிவென்றி, பூவைவென்றி,யாழ்வென்றி, சூதுவென்றி, ஆடல்வென்றி, பாடல்வென்றி என்று ஒழிபிலும், புறப்பொருள்வெண்பாமாலையும் கூறுவதால் அறியப்படும்.

சிலர், சிறப்பாக ஆரிய வழியினர்,பொருளிலக்கணம் பாட்டியலே (Poetics)யன்றி வேறன்று என்று, அதன் சிறப்பை இறப்பக்குறைத்தும் மறைத்தும் கூறுவர். பிராமணனைத் தலையாகவுயர்த்தியும் தமிழனைக் கடையாகத் தாழ்த்தியும்,எழுத்து, சொல், பா, பனுவல் முதலியவற்றிற்குநால்வகை வரணம் வகுப்பதே பாட்டியல்.பொருளிலக்கணமோ, மாந்தன் இதுவரை அறிந்ததும்இனிமேல் அறியப்போவதுமான எல்லாப்பொருள்கட்கும் புலனெறி வழக்கப்படி இலக்கணம்வகுக்கும் ஈடிணையற்ற அறிவியம்.

காஞ்சித்திணையுள் இளமை நிலையாமை,செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உடல்நலநிலையாமை ஆகிய பல்வேறு நிலையாமைகளை எடுத்துக்கூறுவதை, மக்களை நன்னெறிப் படுத்தற்குவாய்ப்பாகக் கொள்வதும், தமிழப் பண்பாட்டுக்கூறாம். மக்களெல்லாரும் இறப்பையும் வாழ்நாட்குறுக்கத்தையும் எண்ணி, சொல்லைச் சுருக்கிச்செயலைப் பெருக்கி, செந்தமிழிற் பேசி, காதல்மனையாளொடு கூடி இன்பம் நுகர்ந்து, இயன்றவரைஅறஞ்செய்து, தத்தம் தொழிலில் வெற்றிபெறுமாறுமேன்மேல் திறம் மிகுத்து இறுதியில் இறைவனையடையவேண்டுமென்பதே முதனூலாசிரியர் நோக்கமாம்.

செய்யுள்

பண்டைய புலவர் உரைநடை, செய்யுள்என்னும் இருவகை நடையுள்ளும் செய்யுள் சிறந்ததென்றுகண்டே, உரைகளும் அகரமுதலி போன்றஉரிச்சொற்றொகுதிகளும் உட்பட, எல்லாப்பனுவல்களையும் செய்யுளில் இயற்றினர்.இதையறியாது, பண்டைப் புலவர்க்கு உரைநடையில்எழுதத் தெரியாதென்றும், உரைநடை நூலில்லாததுபண்டை யிலக்கியத்திற்கு ஒருபெருங் குறையேயென்றும் கூறுவார் "பொரிமாவை மெச்சினானாம்பொக்கை வாயன்" என்ற பழமொழிக்கேஎடுத்துக்காட்டாவார்.