பக்கம் எண் :

60தமிழர் வரலாறு-1

வெண்கல வோசை முழங்குவதாலும் மிகநீண்டு நிற்பதாலும், கைத்தாளம், வண்டித்தாளம்,கைம்மணி, நாழிமணி, ஆன்மணி, குதிரைமணி, யானைமணி,தேர்மணி, கோபுரமணி, சேமக்கலம், பலகைமணி முதலியஇசைக்கருவிகட்கு உறையையே முதற் கருவியாகப்பயன்படுத்தினர். "இடிக்குரல் முரசம் இழுமென்பாண்டில்" (சிலப்.26:194). இதிற் பாண்டில் என்றதுவண்டித் தாளத்தை.

உவச்சரும் பிற பூசகரும் பூசையிற்பயன்படுத்துவது கைம்மணி.

"கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன் சொன்ன
மும்மணிக் கோவை முதற்சீர் பிழை..........."

என்று வாணியன் தாதன் கம்பர்மீது அங்கதம் பாடினான்.

"தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி ஆம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே" 

(புறம்.281)

என்னும் புறப்பாட்டில் இசைமணியென்றதுகைம்மணியையே.

"கறங்குமணி துவைக்கும் ஏறுடைப் பெருநிரை" 

(மலைபடு.573)

என்பதில் குறித்தது ஆன்மணி.

""கறங்குமணி வாலுளைப் புரவியொடு" 

(சிறுபாண்.91-2)

என்பதில் குறித்தது குதிரைமணி.

"கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின்
பெருங்கை யானையிரும் பிடர்த்தலை யிருந்து" 

(புறம்.3:10-11)

என்பதில் குறித்தது யானைமணி.

"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்" 

(அகம்4:10-12)

என்பதில் குறித்தது தேர்மணி.