பக்கம் எண் :

94தமிழர் வரலாறு-1

"எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்."
  

"அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்." 

(சொல்.35.36)

என்பன தொல்காப்பியம்.

தெளிவு

சுருங்கச் சொல்லல் சிறந்தபண்பாயினும், விளக்கமின்றிச் சொல்வதுபயன்படாது குற்றமாகுமாதலின், 'மாப்பூத்தது' என்றுபலபொரு ளொருசொல்லின் சிறப்புவினை குறியாது,'மாவீழ்ந்தது' என்று பொதுவினை குறிப்பது கூடாதென்றும்,அதை 'மாமரம் வீழ்ந்தது', 'விலங்குமா வீழ்ந்தது'என்று தெளிவுபடுத்திக் கூறவேண்டுமென்றும்; ஒருபொருளின் இயற்கைக்கு மாறான இயலையும் செயலையுங்கூறும்போது, அதற்குக் கரணியத்தையும் குறிப்பாகவோவெளிப்படையாகவோ குறித்தல் வேண்டுமென்றும்தொன்னூலாசிரியர் நெறியிட்டுள்ளனர்.

"ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்"
 

"குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி" 

(சொல்.54,55)

என்பன தொல்காப்பியம்.

இலக்கியம்

இசை, நாடகம், கணிதம், கணியம், ஏரணம்,மந்திரம், மறை, பட்டாங்கு, மடை, மருத்துவம், அறம்,அரசியல், மல், போர், நிலம், நீர் முதலிய பல்வேறுநூல்கள்பற்றிய சிறப்பிலக்கியமும்;அறுவகைப்பாவான தனிநிலைச் செய்யுளும், எண்வகைவனப்பான தொடர்நிலைச் செய்யுளும் ஆகியபொதுவிலக்கியமும்; மூலமும் உரையும் செய்யுளாகவேயிருந்தன. இங்ஙனம் வேறெம்மொழியிலும்இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை.

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்" 

(1336)

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.