பக்கம் எண் :

இயனிலைப் படலம்147

"நீரொலித் தன்ன" (மதுரைக். 369)

"கானக் கோழியு நீர்நிறக் காக்கையும்" (சிலப். 10:116)

கடல்வண்ணன் = திருமால்.

நீள்-நீர். நிலம் நிற்பது; நீர் நீள்வது. கத்தரி (ப்பூ) என்பது உலக வழக்கு. சிலர் அதை ஈரல் நிறம் என்பர்.

காளைவகையில் புகர் (கபிலம்), புல்லை, மயிலை, கருமயிலை முதலிய நிறப்பெயர்களும்; கோழிவகையில் சாம்பல், கம்பரிசி முதலிய நிறப்பெயர்களும்; ஆடைவகையில் கெம்பு, காவி, நீர்க்காவி, பழுக்காவி, (orange), துவர், களிப் பாக்கு, வெங்காயம், மாந்துளிர், கிளிப்பச்சை, பாசிப்பயறு, ஈயம், இளநீலம், மயிற்கழுத்து, வானவில், முகில்வண்ணம் (மேகவர்ணம்) முதலிய நிறப்பெயர்களும்; மக்கள் மேனி வகையில் தங்கம், பசலை, புதுநிறம், மா முதலிய நிறப் பெயர் களும் வழங்கி வருகின்றன.

குமரிக்கண்டத் தமிழர் எஃகுச்செவியும் கூர்ங்கண்ணும் நுண்மதியும் உடையராதலின், வண்ணங்களையெல்லாம் நுட்ப மாய் வகுத்து அவற்றிற்கு வெவ்வேறு பெயரிட்டிருந்தனர். பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுள்வடிவிலேயே இருந்ததி னாலும், அவையும் அடியோடு இறந்துபட்டமையாலும், பல வண்ணப் பெயர்களும் இறந்தொழிந்தன. இன்றும் மீன்பெயர்களில் வெண் ணிறவகைகளைக் குறிக்க வெள்ளி, வெள்ளை, வெண்ணெய், வெளுவை முதலிய சொற்கள் ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது.

வடிவு

வட்டம், சதரம், முக்கோணம் முதலிய பரப்பு வடிவங்களும், உருண்டை, உருளை, கூம்பு முதலிய கனவடிவுகளும், பல்வகைய வட்டம், சதுரம் என்பவையும் தென் சொற்களே என்பது என் ‘வடமொழி வரலாறு‘ என்னும் நூலில் விளக்கப்பெறும்.

அளவு

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், என அளவை நால்வகை.

எண்ணல்

எண்ணுப்பெயர்கள் சிற்றிலக்கம் (கீழ்வாயிலக்கம்), பேரி லக்கம் (மேல்வாயிலக்கம்) என இருவகைப்படும். சிற்றிலக்கமும் கீழ்வாய், மேல்வாய் என இரு திறத்தது.