பக்கம் எண் :

148தமிழ் வரலாறு

தேர்த்துகள் 1/2,3238245,3022720,0000000, இம்மி 1/2150400, கீழ் முந்திரி 1/102400, கீழ்க்காணி 1/25600, கீழ்மா 1/6400, கீழ்வீசம் அல்லது கீழ்மாகாணி 1/5120, கீழரைக்கால் 1/2560, கீழ்க்கால் 1/1280, கீழரை 1/ 640 என்பன கீழ்வாய்ச் சிற்றிலக்கம்.

முந்திரி 1/320, காணி 1/80, ஒருமா 1/20, வீசம் அல்லது மாகாணி 1/16, அரைக்கால் 1/8, கால் 1/4, அரை 1/2 என்பன மேல்வாய்ச் சிற்றிலக்கம்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி, தாமரை, பரதம், நெய்தல், ஆம்பல் முதலியன பேரிலக்கம்.

இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.

முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே.

பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.

காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல்.

பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி.

கோல்-கால்=மரத்தூண். தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, (முட்டியின் கீழ்) உடம்பின் நாலிலொரு பகுதி, நாலிலொரு பகுதி.

அரு-அரை = அருகிய (ஒடுங்கிய)இடை, உடம்பின் பாதியள வான இடம், பாதி.