|
ஐந்து :
கை-ஐ-(ஐது)-ஐந்து-அஞ்சு.கை = ஐந்து. ஒரு கையில் ஐந்து
விரலிருப்பதால் கை என்னும் சொல் ஐந்தென்னும்
எண்ணைக் குறித்தது. இன்றும் வறட்டி விற்கும்
பெண்டிர், ஒவ்வோர் ஐந்தையும் ஒவ்வொரு கை என்று
சொல்லுதல் காண்க. கை என்னும் சொல்லின்
மெய்ந்நீக்கமே ஐ என்பதும். கை-ஐ (பெ.எ.).
ஆறு : ஆறு = வழி. நெறி, மதம், பண்டைத்
தமிழகத்தில் ஐந்திணைச் சிறுதெய்வ வணக்கமும்
கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் (மதமாய்)
இருந்ததினால், ஆறென்னும் மதப்பெயர் ஆறென்னும்
எண்ணைக் குறிக்கலாயிற்று. இன்றும் மதம்
என்னும் பெயர் ஆறென்னும் எண்ணுப்
பொருளில் வழங்குதல் காண்க. ஆறு என்னுஞ் சொல்,
"நல்லா றெனினும் கொளல்தீது" (குறள். 222)
என்னுங் குறளடியில் ஒழுக்க நெறியையும்,
"சைவ நல்லா றோங்க" (பெரியபு. சண்டேசு. 57)
என்னுந் தொடரில் சமய நெறியையுங்
குறித்தல் காண்க. ஆறு-அறு
(பெ. எ.).
ஏழு : எழு-எழுவு.
எழுவுதல்=இசைக்கருவியினின்று ஒலியெழச் செய்தல்.
"சாத்தி யாழெழூஉம்" (சேனா. உரை)
"எழுவும் முரசு" (சூளா. கலியாண. 248)
இன்னிசை யேழாதலால், அது எழுதலைக்
குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும்
எண்ணுப்பெயர் தோன்றிற்று.
எழு-எழால் = யாழிசை.
"எழாலை
யன்னசொலந்திழை மாதரார்"
திருக்கல்.15. (கந்த.)
எழு-ஏழ்-ஏழு. எழு(பெ. எ.) - ஏழ் (பெ.எ.).
எட்டு : தமிழில்
எல்லை என்னும் சொல் இடவரம் பையும், திசையையும்
குறிக்கும்.
"ஐந்தா வதனுரு பில்லும் இன்னும்
நீங்கல்ஒப் பெல்லை ஏதுப்
பொருளே." (நன்.299)
என்னும் நன்னூல் நூற்பாவும் ‘மதுரையின்
வடக்கு சிதம்பரம்‘ என்னும் உரையாசிரியன்மார்
எடுத்துக்காட்டும், எல்லை என்னும் சொல்லைத்
திசையென்னும் பொருளில் ஆண்டி ருத்தல் காண்க.
|