|
எல்லை என்பதற்கு ஒருபொருள் மறுசொல்
எண் என்பதாம்.
எண் = வரையறை (தொல். எழுத்து. 308, உரை).
எண் = ஏண் = எல்லை (திவ். திருவாய்.
2:8:8, பன்னீ.)
ஏண்-ஏணி=எல்லை. "நளியிரு முந்நீர்
ஏணியாக"
(புறம். 35: 1)
நேர்த்திசை நான்கும் கோணத்திசை
நான்குமாகத் திசை எட்டாதலின், திசையைக்
குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டென்னும்
எண்ணுப்பெயரைத் தோற்றுவித்தது.
எண்-எட்டு. எண் (பெ.எ.).
தொண்டு:
தொள்-தொண்டு=தொளை. மாந்தன்
உடம்பில் ஒன்பது தொளையிருத்தலால்,
தொளைப்பெயர் அதன் தொகைப் பெயராயிற்று.
ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர்
தொண்டு என்பதே.
"தொண்டுதலை யிட்ட பத்துக்குறை
யெழுநூற்று" (தொல்.
1358)
"தொடித்திரி வன்ன தொண்டுபடு
திவவின்" (மலைபடு.
21)
"தொண்டுபடு திவவின் முண்டக
நல்யாழ்" (சிலப்.
ப. 221. குறிப்புரை)
தொண்டு என்னுஞ்சொல் வழக்கற்றுப்
போகவே, அஃதிருந்த ஒன்றாம் இடத்திற்குத்
தொண்பது (ஒன்பது) என்னும் இரண்டாம் இடப்பெயரும்,
இரண்டாம் இடத்திற்குத் தொண்ணூறு என்னும்
மூன்றாம் இடப்பெயரும், மூன்றாம் இடத்திற்குத்
தொள்ளாயிரம் என்னும் நாலாம் இடப்பெயரும் வந்து
வழங்குகின்றன. நாலாம் இடப்பெயருக்கு
மேலிடச்சொல் இன்மையால், தொண்பது என்பதன்
திரிபான ஒன்பது என்னுஞ் சொல்லொடு ஆயிரம்
என்பதைச் சேர்த்து, ஒன்பதாயிரம் அல்லது
ஒன்பதினாயிரம் என்று சொல்லவேண்டியதாயிற்று.
ஒன்று முதல் பத்துவரையுள்ள
பெயர்களெல்லாம் தனிச் சொல்லாயிருப்பதையும்,
ஒன்பது என்பது கூட்டுச்சொல்லாயும் பது (பத்து) என்று
முடிவதாயும் இருப்பதையும், நோக்குக.
பத்து :
பல் = பல. பல்-பது-பத்து-பஃது.
ஒ.நோ :
அல்-அது-அத்து-அஃது.
மெல்-மெது-மெத்து.
|