சாண் வெட்டியால் முழம் நீளாம்.
செறுவிரல் வீங்ஙியால் பெருவரலோளம்.
தலயண மாறியால் தலக்கேடு பொறுக்குமோ?
தூபம் காட்டியாலும் பாபம் போகா.
பாற்றி துப்பியால் பள்ளியாயிலும்
துப்பாம்.
பொன் சூசி குத்தியாலும் கண்ணுபோம்.
மூவர் கூடியால் முற்றம் அடிக்கா.
வளர்ச்சுக் கெட்டியால் எத்தி
நோக்கும்.
இனி, தமிழிலும் தூங்கியான், தாவியான்
எனவரும் ஆனீற்று வினைமுற்றுகள், தூங்கியோன்,
தாவியோன் என ஓவீற்று வினையாலணையும்
பெயர்களாயின் இயல்பா யிருத்தலையும்,
"எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" (குறள். 494)
என்னுங் குறளில் வினைமுற்றாக
ஆளப்படக்கூடிய எண்ணியார், துன்னியார் என்னும்
வினையாலணையும் பெயர்கள் யகரங் கொண்ட வடிவில்
வந்திருந்தலையும், கண்டு தெளிக.
இனி, செய்து என்னும் வாய்பாட்டு
உகரவீற்று இறந்தகால வினையெச்சத்தின் அமைப்பை
நோக்கின், அது துவ்வீற்றொடு கூடிய வினைமுதனிலை
யென்றே தெரிகின்றது.
எ-டு : செய்+து=செய்து, படி+து=படித்து
கொள்+து=கொண்டு, உண்+து=உண்டு
கேள்+து=கேட்டு
நில்+து=நின்று, என்+து=என்று
கல்+து=கற்று.
இத் துவ்வீறு, அது என்னும் ஈற்றின்
முதற்குறையே. அகரம் சேய்மைச் சுட்டாதலால், ‘அது‘
இறந்தகாலத்தை உணர்த்திற்று.
சில தனிக்குறி லடுத்த கு, டு, று ஈற்று
வினைமுதனிலைகள், இறுதிவலி யிரட்டித்து
இறந்தகாலங் காட்டுகின்றன.
எ-டு: புகு-புக்கு,
புக்க, புக்கான்
சுடு-சுட்டு, சுட்ட, சுட்டான்
அறு-அற்று, அற்ற, அற்றான்
இங்ஙனம் வினைமுதனிலைகள் து, இ, ய்
ஈறுபெற்றும், இறுதி வலியிரட்டித்தும், இருவகையாக
இறந்தகாலங் காட்டும்.
|