பக்கம் எண் :

170தமிழ் வரலாறு

(2) முற்றுவினை x எச்சவினை

முற்றிய வினைச்சொல் வடிவில் எழுவாய்க்கு முற்றுப் பயனி லையாக வருவது முற்றுவினை; முற்றாத வினைச்சொல் வடிவிற் பெயரையாவது வினையையாவது தழுவி எச்சப் பயனிலையாய் வருவது எச்சவினை.

எ-டு: வந்தான், இல்லை-முற்றுவினை (Finite verb) வந்து, போன, உள்ள, இன்றி-எச்சவினை (Relative or verbal participle)

எச்சவினை பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப் படும்.

எ-டு: வந்த, நல்ல-பெயரெச்சம் (Relative Participle)

வந்து, இன்றி-வினையெச்சம் (Verbal Participle)

(3) மூவிட வினை

தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்கட்குரிய வினைகள் மூவிடவினையாம்.

எ-டு: வந்தேன், வந்தோம்-தன்மைவினை
வந்தாய், வா, வராதே-முன்னிலைவினை
வந்தான், வருவான்-படர்க்கைவினை

நிகழ்ச்சிவினை, ஏவல்வினை என முன்னிலைவினை இருவகைப்படும்.

எ-டு: வந்தாய், வருவாய்-நிகழ்ச்சிவினை
வா, வருக - ஏவல்வினை (Imperative Mood)

ஏவல்வினையும், கட்டளை, வியங்கோள் என இருதிறப்படும். கட்டளை அதிகார ஏவல்; வியங்கோள் வேண்டுகோள் அல்லது மதிப்பான ஏவல்.

எ-டு: வா, வாருங்கள் - கட்டளைவினை
வருக - வியங்கோள்வினை

ஏவல்வினை மீண்டும் தூண்டல், விலக்கல் என இருவகைப் படும்.

எ-டு: வா, வருக-தூண்டுவினை
வராதே, வரற்க-விலக்குவினை (Prohibitive Mood)

ஏவல் பலமடியாகவும் வரும்.

எ-டு: வருவி, போக்கு-இருமடி யேவல்
வருவிப்பி, போக்குவி-மும்மடி யேவல்
வருவிப்பிப்பி, போக்குவிப்பி-நான்மடி யேவல்