பக்கம் எண் :

172தமிழ் வரலாறு

இற்றைத் தமிழ் மறைமலையடிகளால் தூய்மைப் படுத்தப் பெற்றது - செயப்பாட்டுவினை

அகத்தியர் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்க வில்லை - செய்வினை

அகத்தியரால் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்கப் படவில்லை - செயப்பாட்டுவினை

(8) தலைமைவினை x துணைவினை

கீழே இருக்கிறான், கூட்டம் முடிகிறது-இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் தலைமை வினை (Main verb).

அவன் வந்திருக்கிறான், எனக்கு நடக்கமுடிகிறது-இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் துணைவினை (Auxilliary verb).

(9) நிறைவினை x குறைவினை

ஈரெண் மூவிடத்தும் முக்காலத்திலும் புடைபெயரும் வினை நிறைவினை; அங்ஙனம் புடைபெயராவினை குறைவினை.

எ-டு: வா, போ-நிறைவினை (Perfect verb)
மாட்டு, வேண்டும்-குறைவினை (Defective verb)

(செய்ய) மாட்டுவேன், (எனக்கு) வேண்டும் என்பன வா, போ என்பனபோல், இறந்தகாலத்திலும் வராமை காண்க.

(10) தொடங்கல்வினை x முடித்தல்வினை

தொடங்கல்வினை தொழிற்பெயருடன் உறு என்னும் துணைவினை கொள்ளும்; முடித்தல் வினை இறந்தகால வினையெச்சத் துடன் விடு என்னும் துணைவினை கொள்ளும். விடு-இடு.

எ-டு: சொல்லலுற்றான் - தொடங்கல்வினை (Inceptive or Inchoative verb)

எழுதிவிட்டான், வந்திட்டான்-முடித்தல் வினை.

(11) தற்பொருட்டு வினை x மற்பொருட்டு வினை

ஒருவன் தானே தனக்குச் செய்துகொள்ளும் வினை தற் பொருட்டு வினையாம் (Reflective verb or Middle voice). இது இறந்தகால வினையெச்சத்துடன் கொள் என்னும் துணைவினை சேர்ந்துவரும். ஒருவன் பிறனுக்குச் செய்து கொடுக்கும் வினை மற்பொருட்டு வினையாம். இது இறந்தகால வினையெச்சத்துடன் கொடு என்னும் துணைவினை சேர்ந்துவரும்.