பக்கம் எண் :

இயனிலைப் படலம்173

எ-டு:

எழுதிக்கொள்,முகம்வழித்துக்கொண்டான் தற்பொருட்டு வினை.

எழுதிக்கொடு, கற்றுக்கொடுத்தான்-மற்பொருட்டுவினை.

இனி, ஒன்றிற்கொன்று எதிரான இணையன்றித் தனித்தனி வெவ்வேறு பொருள்பற்றி வரும் பல வினைகளுமுள. அவையாவன:

(1) வாழ்த்துவினை (Optative Mood)

ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர் அமைப்பை, நீடுநிற்குமாறு அல்லது தழைத்தோங்குமாறு வாழ்த்துவது வாழ்த்து வினையாம். இது தன்மையிடத்தில் வராது.

எ-டு:

"வரையாது கொடுத்தோய்......நடுக்கின்றி நிலியர்!" (புறம்.2)

"தென்னவன் வாழி!" (சிலப். 11 : 22)

"வரப்புயர!" (ஒளவையார்)

தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!

(2) கட்டாயவினை

நிகழ்கால வினையெச்சம் என்னும் அகரவீற்று வினை யெச்சத்தோடு, வேண்டும் என்னும் துணைவினை சேரின் கட்டாய வினையாம்.

எ-டு:

தேர்விற்குப் பணங் கட்டவேண்டும்.

(3) தேவைவினை

இது இருவகையில் அமையும்.

1. அகரவீற்று வினையெச்சத்துடன் அல்லது அல்லீற்று (அல்லது தல்லீற்று)த் தொழிற்பெயருடன் வேண்டும் என்னும் துணைவினை சேர்தல்.

எ-டு:

கூழானாலுங் குளித்துக் குடிக்கவேண்டும்.
நுண்ணிய கருமமும் எண்ணிச்செய்தல்வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒருவேளையாகிலும் உண்ணல் வேண்டும்.