|
5. வினைமுற்றின்பின் தான் என்னும்
இடைச்சொல்.
எ-டு: வருவான்தான்.
இது சென்னைவழக்கு;
அத்துணைச் சிறந்ததன்று.
6. வினைமுற்றின்பின் மன்ற என்னும்
இடைச்சொல்.
எ-டு: "மடவை மன்ற"
(நற். 94)
இது செய்யுள் வழக்கு.
(14) அருள்வினை
இறைவனும் முற்றத் துறந்த முழுமுனிவரும்
செய்யும் செயலைக் குறிக்கும் வினை அருள்வினை. இது
இறந்த கால வினையெச்சத்துடன் அருள் என்னும்
துணைவினை சேர்ந்து வரும்.
எ-டு: எழுந்தருளினார், சொல்லியருளினார்
திருவாய்மலர்ந்தார், திருவுருக்கரந்தார்
என்பவற்றைத் திருவினை என்னலாம்.
(15) உதவிவினை
இறந்தகால வினையெச்சத்துடன் ஈ, தா,
கொடு என்னும் வினைகளுள் ஒன்றுசேர்ந்து, இலவசச்
செயலைக் குறிப்பது உதவி வினையாம்.
எ-டு: சென்றீ, வந்தீ,
சொல்லித்தா, எழுதிக்கொடு.
எழுதிக்கொடுத்தல்
கைம்மாறு கருதின் மற்பொருட்டு வினையாம்.
(16) ஆர்வவினை (Desiderative
Verb)
வினைநிகழ்ச்சியின்மீது
ஆர்வங்காட்டும் வினை ஆர்வ வினையாம். இது
அறுவகையில் அமையும்.
1. ஏன் என்னும் இடைச்சொல்லொடு
புணர்ந்த ஏவல் வினை.
எ-டு: வாருங்களேன்.
2. வேண்டும் என்னும் துணைவினையொடு கூடிய
தொழிற் பெயர் அல்லது அகரவீற்று வினையெச்சம்.
எ-டு: தாங்கள் எங்கள்
இல்லத்திற்குத் தப்பாது வரல் வேண்டும். இறைவ, நீ
எங்ஙனமும் எனக்கு அருளவேண்டும்.
3. தன்மை வாழ்த்து.
எ-டு: யான் வாழ்க!
|