|
என்னும் தொல்காப்பிய நூற்பாவால்
அறியப்படும். செய்யும் என்னும் வாய்பாட்டு
வினைமுற்று நிகழ்காலத்திற்கும் எதிர்
காலத்திற்கும் பொதுவென்று தொல்காப்பியர்
காலத்திற் கருதப்பட்டதினால், அவர் அதை
"நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவி"
என்றார்.
இவ் வாய்பாட்டு வினைமுற்று,
உலகவழக்கிற் பலர்பாற்கு மட்டுமன்றி ஆண்பால்
பெண்பாற்கும் விலக்கப்பட்டுவிட்டது. அதனால், அது
இன்று அஃறிணை யிருபாலிலேயே வழங்கி வருகின்றது.
எ-டு: மாடு வரும், மாடுகள் வரும்.
அவள் வருவாள் என்னும் பெண்பாலீற்றுக்
கூற்று இழிவாகக் கருதப்படுவதால், மதிப்புவாய்ந்த
பெண்டிரைப் பற்றிக் கூறுமிடத்து ‘அந்த அம்மா
வரும்‘ என்று செய்யும் என்னும் வாய் பாட்டு வினை
கொடுத்துக் கூறுவது, இழிவு நீக்கப்பொருட் டேயன்றி
இயல்பான வழக்குப் பற்றிய தன்று.
வேண்டு என்னும் வினைச்சொல்லின்
இயற்பொருள் விரும்பு என்பதே. வேள்-வேண்டு.
வேட்டல் விரும்புதல். வேட்கை விருப்பம்.
"வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை யில" (குறள்.
4)
என்னுங் குறளில், வேண்டுதல் வேண்டாமை
என்னுந் தொடர் விருப்பு வெறுப்பைக் குறித்தல்
காண்க.
ஒருவரின் உதவியை மிக விரும்பினால்,
அவரைக் கெஞ்சிக் கேட்கநேரும். அதனால், வேண்டற்
சொல்லுக்கு மன்றாடற் பொருள் தோன்றிற்று.
வேண்டுகோள், வேண்டிக்கொள், இறை வேண்டல் முதலிய
சொற்களும் சொற்றொடர்களும் இப் பொருள னவே.
பொதுவாக, தேவையான பொருளே
விரும்பப்படும். ஒரு பொருள் ஒருவரால்
விரும்பப்படின், பெரும்பாலும் அது அவர்க்குத் தேவை
என்பதையே உணர்த்தும். இதனால்,
விரும்பற் கருத்தினின்று தேவைக் கருத்துப்
பிறந்தது. ஆங்கிலத் திலும் want
என்னும் சொல் விருப்பத்தையும் தேவையையும்
உணர்த்துதல் காண்க.
வேண்டி = விரும்பி, தேவைப்பட்டு.
வேண்டாது = விரும் பாமல், தேவையின்றி.
வேண்டியதைக் கேள், வேண்டியமட்டும்
எடுத்துக்கொள், என்னும் தொடர்களும் இவ்விரு
கருத்தையும் உணர்த்துதல் காண்க.
|