பக்கம் எண் :

24தமிழ் வரலாறு

மாற்றிக் கூறுவதற்குக் கரணியம், சமற்கிருதம் தேவமொழியென உயர்த்தப்பட்டதும், அதிலுள்ள சொற்களெல்லாம் அதற்கே யுரியனவென்று நம்பப்பட்டதும், பெருவாரியான ஆரியச் சொற்கள் பிராகிருதங்களில் திரிந்து வழங்குவதும், பிராகிருதத் தென் சொற்கள் பல தமிழ் வடிவிற்கும் சமற்கிருத வடிவிற்கும் இடை நிலைப்பட்டிருத்தலுமே.

"இவ் வருஷம் ஈஸ்வரன் கிருபையால் கிராமத்தில் சகலரும் பூரண சௌக்யம்" என்று தமிழ்நாட்டிலேயே வடசொல் நிறைந்த நடை வழங்குமாயின், வடநாட்டுப் பிராகிருதத்தின் சமற்கிருத நடை வண்ணத்தைச் சொல்லவும் வேண்டுமோ? சோத்தம் (ஸ்தோத்ர) திட்டாந்தம் (த்ருஷ்டாந்த) என்பன போன்ற ஆரியச்சொற் சிதைவுகள் வடநாட்டு மொழிகளில் ஏராளமாகவுள்ளன. கட்ட, வட்ட என்னும் பிராகிருதத் தென்சொற்கள், கட்டை, வட்டம் என்னும் தமிழ் வடிவிற்கும், காஷ்ட, வ்ருத்த என்னும் சமற்கிருத வடிவிற்கும் இடைநிலைப்பட்டுள்ளன. இங்ஙனமே ஏனைய பலவும்.

1952ஆம் ஆண்டு வெளிவந்த நந்தமோரியர் காலம் (Age of the Nandas and Mauryas) என்ற வரலாற்றுப் பொத்தகத்தில் (பக்.321-2), தமிழர் நாட்டினின்றும் கிரேத்தாத் தீவினின்றும் சின்ன ஆசியா வழியாய் இந்தியாவிற்குட் புகுந்து தென்னாடு வந்தவரென்றும், அவர் மொழியிலிருந்த g, j, d, d, b என்னும் பொலிவுள்ள (Voiced) மெய்கள், k, c, t, t, p என்னும் பொலிவிலா (Voiceless)மெய்களாக மாறிவிட்டனவென்றும், பண்டாரகர் (Dr.) சுநீதிகுமார் சட்டர்சி உண்மைக்கும் உத்திக்கும் மாறாக வரைந்துள்ளனர். காய்திரிந்து பிஞ்சானதென்றும், இளவட்டம் மாறிக் குழந்தையானான் என்றும் கூறுவது போன்றதே, பொலிவொலி திரிந்து பொலிவிலொலி யாயிற்றென்பது. தெர்மிலர் என்னும் ஓர் இனப்பெயர் கிரேத்தாத் தீவினின்றும், திரு.கனகசபைப்பிள்ளை கருத்துப்படி வங்காய வழியாச் சீனத்தினின்றும், அவர் இங்கு வந்தனர்4 என்பதை எங்ஙனம் உணர்த்தும்?

ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்ட இலைகள் வேறொர் இடத்திற் கிடப்பின், அம்மரத்தினின்று அவ்விலைகள் வந்தன வென்று கொள்வதல்லது. அவ்விலைகளினின்று அம்மரம் வந்ததென்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? ஒரு பெரு மரத்தின் வேருந்தூரும் அடியுங்கவையும் கொம்புங்கிளையும் போத்துங் குச்சும் குழையுங் கொழுந்தும்போல், ஏறத்தாழ ஐம்பதினாயிரம்

4. The Tamils Hundred Years Ago, pp. 46-7.