‘அருவா அதன் வடக்கு’ என்றது, அருவா
நாட்டையும் அருவா வடதலை நாட்டையும். இவை
தமிழகத்தின் வட கோடியில் தெலுங்க நாட்டை
அடுத்திருந்தன. அதனால் நாடுபற்றித் தமிழரை
அருவர் என அழைத்தனர் தெலுங்கர். எல்லைப்புறப்
பகுதிப் பெயரை நாடு முழுவதற்கும் இடுவது அயலார்
இயல்பு. சிந்துவெளி பற்றி நாவலந் தேயத்தைப்
பாரசீகர் ஹிந்து என்றும் கிரேக்கர் இந்தோஸ்
என்றும் குறித்ததையும்; முகலாய அரசர் கன்னட
நாட்டோடு தமிழ்நாட்டையுஞ் சேர்த்துக்
கருநாடகம் என அழைத்ததையும், நோக்குக.
"அருவர் அருவர் எனாவி றைஞ்சினர்
அபயம் அபயம் எனாந டுங்கியே"
என்பது கலிங்கத்துப் பரணி.
"ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவர் அருவர்என அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தீ என்றயர்வர் சென்னி
படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த
போது"
என்பது பழைய வெண்பா.
அருவர் மொழி அருவம்.
கருநடர் (கன்னடர்) தமிழர் என்னுஞ்
சொல்லைத் திகுளர் எனத் திரித்து வழங்குவர்.
வடமொழி தென்னாடு வந்தபின், தமிழை அதனொடு
ஒப்புநோக்கித் தென்மொழி என்றனர்.
திரவிடம், என்பது தமிழம் என்பதன்
திரிபென்று முன்னரே விளக்கப்பெற்றது. திரவிடம்,
தென்மொழி என்னும் பெயர்கள், திரவிட மொழிக
ளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண் டிருந்த
தமிழின் பண்டைத் தலைமையை உணர்த்தும்.
11. மூவேந்தர் பெயர்
தலைக் கழகக் காலத்திற்கு முன்பே, சேர
சோழ பாண்டியர் நாவலம் பொழில் என்னும் இந்து
தேயத்தை ஆளத் தொடங்கி விட்டதனால், அம்
மூவேந்தர் குடித் தோற்றமும் வரலாற்றிற் கெட்டாத
தொன்மைத்தாகும். இதனாலேயே, திருக்குறளை வடநூல்
வழியாகக் காட்டிய பரிமேலழகரும், ‘பழங்குடி‘
என்பதற்குத் ‘தொன்றுதொட்டு வருகின்ற குடி‘ என்று
பொருள் கூறி, ‘தொன்றுதொட்டு வருதல் சேர சோழ
பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந்
தொடங்கி மேம்பட்டு வருதல்‘ என்று எடுத்துக்
காட்டினார்.
|