பக்கம் எண் :

48தமிழ் வரலாறு

கன்னி என்னும் சொல், மக்களினத்துப் பெண்ணைக் குறிக்கும் போது, பூப்படைந்து மணமாகாத பெண்ணையே குறிக்கும்.

ஒரு பெண் வாழ்நாள் முழுதும் மணமாகாதிருக்கலாமாதலால், இளங்கன்னி கன்னிகை யெனப்படுவாள். கை என்பது ஒரு சிறுமைப் பொருள் பின்னொட்டு (Diminutive suffix).

எ-டு: குடி (வீடு) - குடிகை (சிறுவீடு) - குடிசை.

பூப்படையாத சிறுமியையும் மணமான பெண்ணையும் கன்னி யென்று சொல்லும் வழக்கமில்லை. கன்னிகழிதல் கன்னி யழிதல் என்னும் வழக்குகளை நோக்குக.

கன்னி என்னும் சொல்லைக் கன்யா என்றும், கன்னிகை என்னும் சொல்லைக் கன்யகா என்றும், வடமொழியாளர் திரித்துச் சிறுமி, மகள் என்ற பொருள்களிலும் வழங்குவர். அதற்கேற்ப, கன் (திகழ்), கன (சிறு) என்பவற்றை வேராகக் காட்டுவர்.

திகழ்தலைக் குறிக்கும் கன் என்னுஞ் சொல் வலிந்து பொருத்துவதாகும். சிறுமையைக் குறிக்கும் கன என்னுஞ் சொல் பூப்படைந்த பெண்ணிற்குப் பொருந்தாது.

இனி, வடமொழியாளர் வேராகக் காட்டும் கன், கன என்னும் இரு சொல்லும் தென்சொல் திரிபே.

கல் - கன்று. கன்றுதல் = எரிதல், கருகுதல்,சினத்தல்.

கல் - கன் - கனல் = நெருப்பு. கனலுதல் = எரிதல், சினத்தல்.

கனலி = கதிரவன்.

கல் - கள் - காள் = காளம் (காளவாயில்) = சுண்ணாம்புக்கல் நீற்றும் சுள்ளை. காள்-காய். காய்தல் = எரிதல், சினத்தல், திகழ்தல்

கள் - கண் - கண - கணப்பு=நெருப்பு. திகழ்தல் நெருப்பின் தொழில். கண் - கணை = சூடு. கன் - வ. கன்.

குல் - குன்- குன்னி = மிகச் சிறியது. குன்னுதல் = சிறுத்தல், ஒடுங்குதல்.

குல் - குன்று - குன்றி. குன்று - குன்றம்.

குல் - குள் - குள்ளம், குள்ளை. குள் - குட்டை. குள் -குறு- குற்றி -குச்சி. குறு - குறுகு. குறு - குறள் - குறளி.

மிகச் சிறியவற்றை நன்னியுங் குன்னியும் என்பது நெல்லை வழக்கு.

குன்-கன்-கன(வ.)