பாரதக் காலத்திற்குப்
பிற்பட்டதாகும். அதற்கும் பிந்தியவை மானவீரன்
மதுரையும் தமிழ்நாட்டு வடமதுரையும் என்க. வடநாட்டு
மதுரை நோக்கியே தலைக்கழக மதுரை தென்மதுரை
யெனப்பட்டதென அறிக.
மதுரை என்னும் இடப்பெயர், திங்களைக்
குறிக்கும் மதி என்னும் சொல்லிலிருந்து
தோன்றியிருத்தல் வேண்டும். தலைக்கழக மதுரை
யமைத்த பாண்டியன், தன் குலமுதலாகக் கொண்ட
சுடர்ப்பெயரை அடியாகக்கொண்டு, மதிரை என்று அந்
நகர்க்குப் பெயரிட்டதாகத் தெரிகின்றது. குதி
என்னும் சொல்லினின்று குதிரை என்னும் பெயர்
தோன்றியிருத்தல் காண்க. மதிரை என்பது பின்பு
ஒலிப்பெளிமைபற்றி மதுரை எனத் திரிந்துள்ளது.
ஒ: நோ: எதிர்கை - எதுகை.
குலசேகர பாண்டியன்
வேண்டுகோட்கிணங்கி, சிவபெரு மான் தன்
சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த
இடம் மதுரை யெனப்பட்டதென்று, திருவிளையாடற்
புராணத்திற் கூறப்பட்டிருப்பது தொல்கதை
முறைப்பட்ட உன்னிப்புச் சொல்லியல் (Guessing
Etymology) என்று கூறிவிடுக்க.
"திசைதிசை தேனார்க்குந் திருமருத
முன்றுறை" (கலித்.26)
வைகைக் கரையைச் சார்ந்ததாதலின்,
மருத முன்றுறை என்பது பஃறுளியாற்றங்கரை மதுரைப்
பெயருக்குக் கரணிய மாகாது.
|