பக்கம் எண் :

இயனிலைப் படலம்95

எ-டு: கோணியூசி = பெரியவூசி.

(13) பின்னொட்டுகளும் ஈறுகளும் (Suffixes)

பொருள் பின்னொட்டு எடுத்துக்காட்டு
சிறுமை இல்
கை
குடி-குடில், தொட்டி-தொட்டில் முறம்- முற்றில்-முச்சில்
கன்னி-கன்னிகை, குடி- குடிகை- குடிசை
பெருமை அம் கம்பு-கம்பம், விளக்கு- விளக்கம், மதி மதியம்(முழுநிலா),
நிலை-நிலையம்
இடம் ஆரம் கொட்டாரம், பண்டாரம் (பண்டசாலை), வட்டாரம்
இறையிலிநிலம் புறம் அடிசிற்புறம், அறப்புறம்,
புதுக்குப்புறம்

(14) புணர்ச்சி

இருசொற் புணர்வது புணர்ச்சி. மொழி பொதுமக்களால் ஆக்கம் பெற்றதாகலின், அதன் புணர்ச்சியும் அவரது அமைப்பே. கவனித்தறியப்பெறாது ஏற்கெனவே யிருந்த சொற்கூட்டு நெறிமுறை களையே, புணர்ச்சி நெறிமொழிகள் (விதிகள்) என எடுத்துக்கூறினர் இலக்கணியர். இயல்புபுணர்ச்சி, திரிபுபுணர்ச்சி எனப் புணர்ச்சி இருவகைப்படும். ஒருவகை வேறுபாடுமின்றி இயல்பாயிருப்பது இயல்பு புணர்ச்சி; ஏதேனுமொரு வகையில் திரிவது திரிபு புணர்ச்சி. திரிதல்- வேறுபடுதல். அது தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப் படும். முன்னில்லாத எழுத்தோ அசையோ தோன்றுவது தோன்றல்; ஓரெழுத்து மற்றோரெழுத்தாக மாறுவது திரிதல்; முன்னுள்ள எழுத்தோ அசையோ மறைவது கெடுதல்.

புணர்ச்சியிற் புதிதாய்த் தோன்றும் அசை, இருசொற்களை அல்லது ஒரு சொல்லையும் ஒரு சொல்லுறுப்பையும் சார்ந்து நின்று இயைப்பதால் (இசைப்பதால்), சாரியை எனப்படும்.

இயல்பு புணர்ச்சி

சாத்தன்+வந்தான் = சாத்தன் வந்தான்
நல்ல+பையன் = நல்ல பையன்
பால்+இனிது = பாலினிது