பக்கம் எண் :

சிதைநிலைப் படலம்103

சட்டமாயிருந்ததினாலும், பொதுமக்களின் பழங்குடிப் பேதை மையாலும், தமிழர் உள்ளத்தில் ஆரிய ஏமாற்று எளிதாய்ப் பதிந்து வேரூன்றிவிட்டது.

6. சமற்கிருதவாக்கம்

தாம் என்றும் உயர்வாயிருக்கவேண்டுமெனின், இந்திய நாகரிகம் தமதெனக் காட்டுதற்குத் தமக்கென ஓர் இலக்கியம் இருத்தல் வேண்டுமென வுணர்ந்த ஆரியர், தமிழிலக்கியத்தை மொழிபெயர்த்தற்கு, வழக்கற்ற வேதமொழியொடு அக்கால வட்டாரமொழிகளாகிய பிராகிருதங்களையும் தமிழையும் சேர்த்து, சமற்கிருதம் என்னும் அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழியை அமைத்துக் கொண்டனர். இவ் வமைப்புமுறை என் "வடமொழி வரலாறு" என்னும் நூலில் விரிவாக விளக்கப் பெறும்.

சமற்கிருத இலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும்

சமற்கிருதத்தை அமைத்துக்கொண்டபின், தமிழ் ஏட்டெழுத் தைப் பின்பற்றிக் கிரந்த அட்சரம் என்று சொல்லப்படும் நூலெழுத் தையும் அமைத்துக்கொண்டு, முன்பு எழுத்தும் சொல்லும்பற்றிய இலக்கணத்தையும் பின்பு பல்துறை யிலக்கியத்தையும் மொழி பெயர்க்கலாயினர் ஆரியர்.

வேதத்தின் கிளைகள்போன்ற சாகைகட்குத் தோன்றிய பிராதி சாக்கியங்கட்குப்பின், முதலாவதெழுந்த சமற்கிருத விலக்கணம் ஐந்திர வியாகரணம் ஆகும். இத தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிந்தது. இதை இயற்றினவன் இந்திரன் என்பான். அப் பெயர் இயற்பெயராகவும் இருந்திருக்கலாம்; புனைபெயராகவு மிருந்திருக்கலாம். சமற்கிருதம் தேவமொழி என்னும் ஏமாற்றிற் கேற்ப, தேவரரசன் பெயரை வேண்டுமென்றே அந் நூலாசிரியன் பெயராகப் பொருத்தி யிருக்கலாம். "விண்ணவர் கோமான் விழு நூல்" என்று இளங்கோவடிகளும் குறித்தல் காண்க.

அகத்தியர் மருத்துவ நூலையும் நாரதர் இசைநூலையும் வட மொழியில் மொழிபெயர்த்ததாகத் தெரிகின்றது. இவ் விருவரும் முறையே அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணத்தையும், பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழிலக்கணத்தையும், தமிழில் இயற்றினர். இங்ஙனம் ஆரியர் தமிழ்நூ லியற்றியது, ஆரியக் கருத்தைத் தமிழ் நூல்களிற் சிறிதுசிறிதாய்ப் புகுத்தற்கேயன்றி, தமிழை வளர்த்தற்கன்று.