பக்கம் எண் :

120தமிழ் வரலாறு

நாட்டார் அறியச்செய்த அருந்தமிழ்த் தொண்டர், ஆங்கிலப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளையாவர்.

(14) பர். உ. வே. சாமிநாதையர்

காவிரி வாய்ப்படவும் கறையான் வாய்ப்படவு மிருந்த கடைக்கழக நூல் ஏட்டுச்சுவடிகளை, ஊரூராகவும் தெருத்தெரு வாகவும் வீடுவீடாகவும் திரிந்து தேடியும், விறகுதலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக்குறிப்புகளும் ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்க்குப் பேருதவியாகவும் பிறர்க்குப் பெரும்பயன்படவும் வெளியிட்டவர், தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர் உ.வே. சாமிநாதையரே.

(15) பவானந்தம் பிள்ளை

தொல்காப்பியம், இறையனார் அகப்பொருளுரை, யாப்பருங் கல விருத்தி முதலிய நூல்களை வெளியிட்டும், தம் பெயரால் ஒரு தமிழ்க் கலைமன்றம் நிறுவியும், ஆங்கில முகவுரை வாயிலாய்த் தமிழின் தனிப்பெருமையை எடுத்துக்காட்டியும், தமிழ்ர்த் தொண்டாற்றியவர் சென்னை ஊர்காவல் துறை உதவி ஆள்வினைஞரா யிருந்த ச.பவானந்தம் பிள்ளையாவர்.

(16) த. வே. உமாமகேசுவரம் பிள்ளை

கரந்தைத்தமிழ்க் கழகத்தையும் இலவச நடுநிலைப் பள்ளியையும் தனித்தமிழ்க் கல்லூரியையும் நிறுவி, தமிழையும் தமிழ் மாணவரையும் புரந்தவர், தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையாவர்.

(17) மறைமலையடிகள்

தமிழ்ப்பேராசிரியரும் மாபெருந் தமிழ்ப்புலவரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற்கெண்பது விழுக் காடு வடசொற்களைக் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடி யும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களைகளால் நெருக் குண்டு அடியோடு அழிந்துபோகவிருந்த நிலையில், வட சொற்களை அறவே களைந்து தூய தீந்தமிழில். உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு முதலிய பலதுறை யிலும், ஏறத்தாழ ஐம்பது நூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழி பெயர்க்கவும் இயலும் என்பதைக் காட்டி, மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கிவைத்த வரும், தம் மும்மொழிப் புலமையால்