|
அவர்கள் என்னும்
சொற்களாற் குறிப்பது தூய உலகவழக்கம். பன்மையிலக்கணமெல்லாம்
செய்யுள் நடைக்கே எழுதப்பெற்றதினால் இவ் வழக்கு
அதில் இடம்பெறவில்லை.
அடிகள் என்பது திருவடி நோக்கிக்
கடவுளைக் குறிக்கும். அது துறவினால் தெய்வத்தன்மை
பெற்ற பெரியோரைக் குறிக்கும் போது
இருபாற்பொதுவாம்.
எ-டு: இளங்கோவடிகள், கவுந்தியடிகள்.
ஆரீறும் கள்ளீறும் உயர்வுபற்றி
ஒருமைக்கும் வரும்.
எ-டு: மகனார், நக்கீரனார், அடிகளார்,
வள்ளலார்,
நீங்கள், அவர்கள், தாங்கள்,
குருக்கள்.
செய்யுள்நடை, உரைநடை என இலக்கிய நடை
இருவகைப் படும். செய்யுள்நடைக்கு விலக்கப்பட்ட
உலகவழக்கு உரைநடைக்கு வரும் என அறிக. உலகவழக்கென்பது
உயர்ந்தோர் வழக்கேயன்றி இழிந்தோர் வழக்கன்று.
ஒன்றன்பாலீறுகள்
திணைபால் தோன்றாத முதுபண்டைக் காலத்தில்,
ஒன்று என்று பொருள்படும் ஒன் என்னுஞ் சொல்
ஒருமையுணர்த்திற்று. அது புணர்ச்சியில் தொக்கு
"ன்" அளவாயும் நிற்கும்.
எ-டு: நான், நீன், தான்.
ஒன்னீறு அன்னீறாகவும் திரியும். அன்னீறு
ஆனீறாம்.
எ-டு: நெடுங்கழுத்தன்
(ஒட்டகம்), சொறியன் (தவளை), கடுவன்; உள்ளான்,
கரிப்பான், கத்தரிப்பான்.
ஆண்பால் அன்னீறுபோல், பண்டை
யொருமை அன்னீறும் அல் எனத் திரியும்.
எ-டு: உள்ளான் - உள்ளல், நெடுங்கழுத்தன்
- நெடுங் கழுத்தல்.
சுட்டெழுத்துகளும் முதற்காலத்தில் ஈறாயிருந்து
ஒருமை யுணர்த்தினதாகத் தெரிகின்றது. அவற்றுள்
இகரமே இன்று வழக் கிலுள்ளது. இ = இது.
எ-டு: குதிரைவாலி, பனையேறி (மீன்).
அல்லி, பல்லி, புலி (புல்லி), கிளி
(கிள்ளி) முதலியனவும், குன்னி, நன்னி முதலியனவும்,
இகரவீற்றுப் பெயர்களே.
ஐம்பாலீறு தோன்றியபோது, அது, இது, உது
என்னும் சுட்டுப்பெயர்கள் ஒன்றன்பா லீறாயின.
|