|
(8) முதனிலை வலித்து ஈறுபெற்ற
தொழிற்பெயர்.
எ-டு: அஞ்சு-அச்சு-அச்சம்,
விரும்பு-விருப்பு- விருப்பம்.
(9) ஈறு திரிந்த தொழிற்பெயர்.
எ-டு: வெல்-வென், வேள்-வேண்.
(10) பலவீற்றுத் தொழிற்பெயர்.
எ-டு: கல-கலப்பு, கலப்படம்,
யா-யாப்பு-யாப்புறவு.
தொழிற்பெயரீறு வகைகள்
(1) சினைப்பெயர்கள், (2) இடப்பெயர்கள்,
(3) சுட்டடிகள், (4) அளவுகுறித்த சொற்கள், (5) பண்புப்பெயரீறு.
(6) வினைமுற்றீறு.
(1) சினைப்பெயர்கள்
கை என்பது ஆகுபெயராய்க் கையினாற் செய்யும்
தொழிலை யுங் குறிக்கும். இது கருவியாகுபெயர்.
"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" (1035)
என்னுங் குறளிலுள்ள "கைசெய்து" என்னுந்
தொடருக்கு, கையினாற் செய்து என்று உரை கூறுவதினும்,
சிறந்த தொழிலாகிய உழவைச் செய்து என்று கூறுவது
பொருத்தமாம்.
தொழிலைக் குறிக்கும் கை என்னும்
சொல் தொழிற் பெயரீறாவது பொருத்தமே.
எ-டு: செய்-செய்கை, கல்-கற்கை, நம்பு-நம்பிக்கை.
கை என்னும் சினைப்பெயரும் செய் என்னும்
வினையினின்று திரிந்ததே. செய்-(கெய்)-கை.
தொழிற்பெயரீறான மற்றொரு கைப்பெயர்
பாணி என்பதாம்.
எ-டு: சிரி - சிரிப்பாணி = சிரிக்கை
(சிரிப்பு).
இது நெல்லை வட்டார வழக்கு. பாணி கை.
பண்ணுவது பாணி. கையினாற் செய்யும் இசைக் காலவறுப்பும்
பாணி யெனப்படும்.
(2) இடப்பெயர்கள்
அகம்-நம்பகம், வஞ்சகம், தாண்டவம்-தாண்டகம்.
தலை-விடுதலை.
சுட்டடிச்சொற்கும் இடப்பெயர்க்கும்
வேறுபாடறிதல் வேண்டும். அகம் என்பது சுட்டடிச்
சொல்லாயின் அகு+அம் என்று பிரியும்; இடப் பெயராயின்
பிரியாது.
|